ரூபாய் 47.8 இலட்சம் மதிப்பிலான தங்கம், சிகரெட்டுகள், குட்டி விமானங்கள் சென்னையில் பறிமுதல் ஒருவர் கைது
ரூபாய் 47.8 இலட்சம் மதிப்பிலான தங்கம், சிகரெட்டுகள், குட்டி விமானங்கள் சுங்கத் துறையால் சென்னையில் பறிமுதல், ஒருவர் கைது.
உளவுத் தகவலை தொடர்ந்து, துபாயில் இருந்து எஃப் இசட் 8517 விமானத்தில் சென்னை வந்திறங்கிய சென்னையை சேர்ந்த கருப்பசாமி, 65, மற்றும் சசிகுமார், 31, ஆகியோரை விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகள் இடைமறித்தனர். அவர்களது பைகளை சோதனை செய்து பார்த்த போது, தானியங்கி குட்டி விமானங்கள் நான்கு, ரூ 4.17 மதிப்புடைய 10 பேட்டரிகள் மற்றும் ரூ.2 இலட்சம் மதிப்பிலான 100 பெட்டிகளில் சிகரெட்டுகள் ஆகியவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
அதே விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த சதக்கத்துல்லா முகமது இஸ்மாயில், 52, என்பவரை சோதனை செய்த போது, அவரது உள்ளாடையில் இருந்து 130 கிராம் எடையுள்ள தங்கப் பசையைக் கொண்ட பொட்டலம் கைப்பற்றப்பட்டது. அவரது கால் சட்டைப் பையில் இருந்து 84 கிராம் எடையுடைய இரண்டு தங்கச் சங்கிலிகளும் கைப்பற்றப்பட்டன. மொத்தம் ரூ.11 இலட்சம் மதிப்புடைய 214 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.
துபாயில் இருந்து ஈ கே 544 விமானத்தில் சென்னை வந்திறங்கிய மன்னார்குடியைச் சேர்ந்த புவியரசன், 25, என்பவரை சோதனை செய்த போது, அவரது உடலில் இருந்து ரூ 30.63 இலட்சம் மதிப்புடைய 593 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார்.
ரூ.41.63 இலட்சம் மதிப்புடைய 807 கிராம் தங்கம், ரூ. 6.17 இலட்சம் மதிப்பிலான சிகரெட்டுகள், குட்டி விமானங்கள் என மொத்தம் ரூ.47.8 இலட்சம் மதிப்பிலான கடத்தல் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருவதாக செய்திக் குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்