பிரதமர் அலுவலகம் சர்வதேச வீட்டுவசதித் தொழில்நுட்பச் சவால் இந்தியாவின் கீழ் கலங்கரை விளக்கத் திட்டங்களுக்கான அடிக்கல்லை ஜனவரி 1 அன்று பிரதமர் நாட்டுகிறார்
பிரதமர் வீட்டு வசதித் திட்டம் (நகர்புறம்) மற்றும் ஆஷா விருதுகளை பிரதமர் வழங்குகிறார், தமிழக முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
ஆறு மாநிலங்களில் உள்ள ஆறு நகரங்களில் சர்வதேச வீட்டுவசதித் தொழில்நுட்ப சவால் – இந்தியா திட்டத்தின் கீழ் கலங்கரை விளக்கத் திட்டங்களுக்கான அடிக்கல்லை காணொலி மூலம் 2021 ஜனவரி 1 அன்று காலை 11 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுகிறார். குறைந்த விலையிலான நீடித்த வீட்டு வசதிக்கான ஆஷா இந்தியா திட்டத்தின் வெற்றியாளர்களையும் அறிவிக்க இருக்கும் பிரதமர், பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தை (நகர்புறம்) சிறப்பாகச் செயல் செயல்படுத்தியதற்கான வருடாந்திர விருதுகளையும் வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியின் போது, நவரித் (இந்திய வீட்டுவசதிக்கான புதிய, கட்டுப்படியாகக் கூடிய, சரிபார்க்கப்பட்ட, புதுமை ஆராய்ச்சித் தொழில்நுட்பங்கள்) என்னும் புதுமையான கட்டுமான தொழில்நுட்பங்களுக்கான சான்றிதழ் கல்வியையும் பிரதமர் அறிமுகப்படுத்தி வைக்கிறார். மேலும், சர்வதேச வீட்டுவசதி தொழில்நுட்பச் சவால் - இந்தியாவால் அடையாளம் காணப்பட்டுள்ள 54 புதுமையான வீட்டுவசதிக் கட்டுமானத் தொழில்நுட்பங்கள் குறித்த கையேட்டையும் அவர் வெளியிடுகிறார். திரிபுரா, ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர்கள் இந்நிகழ்ச்சியில் பபங்கேற்கிறார்கள்.
கலங்கரை விளக்கத் திட்டங்கள்
நாட்டிலேயே முதல்முறையாக, கட்டுமானத் தொழிலில் புதுயுக மாற்று சர்வதேசத் தொழில்நுட்பங்கள், பொருள்கள் மற்றும் நடவடிக்கைகளை கலங்கரை விளக்கம் திட்டங்கள் மிகப்பெரிய அளவில் எடுத்துக் காட்டுகின்றன. வீட்டுவசதிக் கட்டுமானத்துறையில் முழுமையான வகையில் புதுமைத் தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கு பணியாற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச வீட்டுவசதித் தொழில்நுட்பச் சவால் - இந்தியாவின் கீழ் இவை கட்டமைக்கப்பட்டு வருகின்றன. மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தூர், குஜராத்தில் உள்ள ராஜ்கோட், தமிழ்நாட்டில் சென்னை, ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சி, திரிபுராவில் உள்ள அகர்தலா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ ஆகிய நகரங்களில் கலங்கரை விளக்கத் திட்டங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு இடத்திலும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. வாழ்வதற்குத் தயாரான வீடுகளை 12 மாதங்களுக்குள் வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் கட்டுமானத்துடன் ஒப்பிடும் போது இவற்றின் செலவு குறைவாகவும், அதேசமயம் இந்த வீடுகள் அதிக தரத்துடனும் நீடித்து நிற்கும் வகையிலும் இருக்கும்.
இந்தூரில் முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட அமைப்பு, ராஜ்கோட்டில் ஒற்றைக்கல் கட்டுமானத் தொழில்நுட்பம், சென்னையில் முன்வார்ப்பு கான்கிரீட் கட்டுமான அமைப்பு, ராஞ்சியில் முப்பரிமாண முன்வார்ப்புக் கட்டுமான அமைப்பு, அகர்தலாவில் எஃகுக் கட்டமைப்பு கொண்ட இலகு பலகம், லக்னோவில் பிவிசி அமைப்பு போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களை கலங்கரை விளக்கத்திட்டங்கள் பயன்படுத்துகின்றன. இத்துறையில் தொழில்நுட்பப் பகிர்தல் மற்றும் அதன் மறுபயன்பாட்டுக்கு நேரடி ஆய்வகங்களாக கலங்கரை விளக்கத் திட்டங்கள் திகழும். ஐஐடிக்கள், என்ஐடிக்கள், இதர பொறியியல் கல்லூரிகள், திட்டமிடுதல் மற்றும் கட்டுமானக் கல்லூரிகள் ஆகியவற்றின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், கட்டுமானர்கள், தனியார் மற்றும் பொதுத்துறைப் பணியாளர்கள் மற்றும் இதர பங்குதாரர்களுக்கு திட்டமிடுதல், வடிவமைப்பு, பொருள்களின் உற்பத்தி, கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் பரிசோதனை ஆகியவற்றை இது உள்ளடக்கும்.
ஆஷா-இந்தியா
குறைந்த விலையிலான நீடித்த வீட்டுவசதியை மேம்படுத்துவதற்கான ஆஷா இந்தியா திட்டம், சாத்தியமுள்ள எதிர்காலத் தொழில்நுட்பங்களுக்கு வழிகாட்டுதலையும், மேம்பாட்டு ஆதரவையும் அளித்து உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைதலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது. ஆஷா-இந்தியா திட்டத்தின் கீழ், வழிகாட்டுதலையும், மேம்பாட்டு ஆதரவையும் அளிப்பதற்காக ஐந்து ஆஷா-இந்தியா மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேம்பாட்டு ஆதரவின் கீழ் சாத்தியமுள்ள தொழில்நுட்பத்திற்கான வெற்றியாளர்களை பிரதமர் அறிவிப்பார். இந்த முன்னெடுப்பின் கீழ் அடையாளப்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள், செயல்முறைகள் மற்றும் பொருட்கள் இளம் மற்றும் படைப்புத்திறன் மிக்க மனங்கள், புது நிறுவனங்கள், புதுமையாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும்.
பிரதமர் வீட்டு வசதி திட்டம் - நகர்புறம் இயக்கம்
2022-க்குள் அனைவருக்கும் வீட்டுவசதி என்னும் இலக்கை எட்டுவதற்காக பிரதமர் வீட்டு வசதித் திட்டம் - நகர்புறம் உருவாக்கப்பட்டது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பயனாளிகளின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக, பிரதமர் வீட்டு வசதித் திட்டம் - நகர்புறம் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்துவதற்கான வருடாந்திர விருதுகளை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் அறிவித்தது. பிரதமர் வீட்டு வசதித் திட்டம் - நகர்புறம் திட்ட விருதுகள் - 2019-இன் வெற்றியாளர்கள் நிகழ்ச்சியின் போது கௌரவிக்கப்படுவார்கள்
கருத்துகள்