ரூ 274 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்த ஒருவர் கைது
ரூ 274 கோடி மதிப்பிலான போலி ரசீதுகளை வெளியிட்டதற்காகவும், சட்டவிரோத உள்ளீட்டு வரி கடனாக ரூ 22.12 கோடியை மோசடி செய்ததற்காகவும் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டை சேர்ந்த 32 வயதான வரி ஆலோசகர் ஒருவரை சென்னை புறநகர் ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறை கைது செய்துள்ளது.
விரிவான விசாரணைக்கு பின்னரும், ஆதாரங்களை சேகரிப்பதற்காக பல முறை சோதனைகள் செய்த பின்பும் அவரை ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறை கைது செய்துள்ளது. 2021 ஜனவரி 26 அன்று கைது செய்யப்பட்ட அவர், சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றங்களுக்கான நீதிபதி II முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
பிற நபர்களின் கேஒய்சி ஆவணங்களை தவறாக பயன்படுத்தி அவரும் அவரது கூட்டாளிகள் சிலரும் ஜிஎஸ்டி பதிவுகளை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி நிறுவனங்களின் ரசீதுகள் உட்பட அனைத்து ஆவணங்களையும் தயாரிப்பதற்கான வரி ஆலோசகராக கைது செய்யப்பட்ட நபர் செயல்பட்டுள்ளார். ஜிஎஸ்டி கடன் மோசடிகளுக்காகவே தொடங்கப்பட்ட இந்த போலி நிறுவனங்கள், சரக்குகள் மற்றும் சேவைகளை வழங்காமலேயே போலி ரசீதுகளை பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளன. கைது செய்யப்பட்டவரின் கூட்டாளிகளால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனங்கள் இந்த போலி ரசீதுகளை பயன்படுத்தி சரக்கு மற்றும் சேவை வரியை கட்டியுள்ளன.
இதன் மூலம், ரூ 274 கோடி ரசீது மதிப்புக்கு ரூ 22.12 கோடி ஜிஎஸ்டி கடன் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பலனடைந்த நிறுவனங்களையும் ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறை கண்டுபிடித்துள்ளது. இதில் வேறு யாருடனாவது வரி ஆலோசகருக்கு தொடர்புள்ளதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும், அண்ணா நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் செயல்படும் உதவி மையத்தை நேரடியாகவோ, தொலைப்பேசி மூலமோ வரி செலுத்துவோர் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: 26142850, 26142851, 26142852 and 26142853. மின்னஞ்சல்: Sevakendra-outer-tn@gov.in
கூடுதல் ஆணையர் திருமதி பி ஜெயபாலசுந்தரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன
கருத்துகள்