முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் தா.பாண்டியன் மறைந்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டியில் டேவிட், நவமணி தம்பதிக்கு நான்காவது மகனாக 18.மே.1932 ல் பிறந்தவர் பிரமலைக் கள்ளர் சமுதாயக் கல்விச் சேவைக்காக கிறிஸ்தவ மிஷனரி தொடங்கிய பள்ளியில் ஆசிரியர் தான் பெற்றோர்கள் காமக்காபட்டி கள்ளர் சீரமைப்புத் துறைப் பள்ளியில் ஆரம்பக் கல்வியும் பின் உசிலம்பட்டி போர்டு உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.
சிறந்த பேச்சாளர். தா.செல்லப்பா. கல்லூரிப் பேராசிரியரான அண்ணன் தந்த ஊக்கத்தில், சிறந்த பேச்சாளராக உருவானார். காரைக்குடி கம்பன் கழகத்துக்கும் பங்கு உண்டு.
காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இண்டர்மீடியட் சேர்ந்து 1953 ல் கட்சியிலும் சேர்ந்துவிட்டார். அப்போது மாணவர் பேரவைத் தேர்தலிலும் வெற்றி. பின்னர், அதே கல்லூரியில் ஆங்கில ஆசிரியரான பிறகு, கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டினார். 1957 தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் புனைப்பெயரில் அவர் பேச, உண்மையான பெயர் வந்துவிட்டது. வேலையை ராஜினாமா செய்யச் சொன்னார் கல்லூரி முதல்வர். அந்நேரம் அழகப்பா செட்டியாரிடமிருந்து அழைப்புவர, “தலைமறைவாக இருந்துகொண்டே பிரிட்டிஸ் போலீஸிடம் சிக்காமல் அரசியல் நடத்துகிற சாமர்த்தியசாலிகள் அல்லவா கம்யூனிஸ்ட்டுகள்? நீ இப்படி மாட்டிக்கொண்டாயே?” என்று சொன்னவர், லண்டனில் படித்தபோது தான் வாங்கிய மார்க்ஸ் எழுதிய புத்தகங்களை தா.பாண்டியனிடம் கொடுத்தார். “நம் கல்லூரியில் மாணவர் பேரவைத் தலைவராக வென்ற எந்த மாணவனும், ‘அரியர்’ வைக்காமல் தேர்ச்சி பெற்றதில்லை. நீ இரண்டிலும் வென்றாயல்லவா.. அதற்குத்தான் இந்தப் பரிசு!” என்று ஆச்சரியப்பட வைத்தார்.
தலைசிறந்த ஜனநாயகவாதி, மாற்றுக் கட்சிகள், தலைவர்களின் கொள்கைகளையும் மதிப்பவர். ஆரம்பகால கம்யூனிஸ்ட் கட்சியினர், திகவை ‘திராவிடர் கலகம்’ என்று இழிவுபடுத்தியும், வளர்க்கப்பிளவு ஏற்படுத்துவோர் என்று குற்றம்சாட்டியும் வந்த காலத்திலேயே பெரியாரைப் புகழ்ந்து பேசி, கட்சியின் கண்டனத்துக்கு உள்ளானவர். எந்தக் கட்சி எங்கே பொதுக்கூட்டம் ஆனாலும் முதல் ஆளாகப் போய்விடுவார். அண்ணாவை அவரது மேடையிலேயே எதிர்த்துப் பேசியிருந்தாலும், 1967-ல் திமுக வெற்றிவிழா சென்னை கடற்கரையில் நடந்தபோது, பார்வையாளர் வரிசையில் போய் உட்கார்ந்து கவனித்தவர். இப்போதும் கூட திராவிடக் கட்சிகளின் ஆட்சியை விமர்சிக்கிறபோது, அவற்றின் சாதனைகளைச் சொல்லாமல் மறைப்பதில்லை.
தாமதமாக உணர்ந்த பேரன்பு
தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக இரண்டு வயதில் தந்தையை இழந்த ஜாய்சி என்ற பெண்ணை தா.பாண்டியனுக்குத் திருமணம் செய்துவைத்தார் அப்பா டேவிட். டேவிட் ஜவஹர் என்ற மகனும், அருணா, பிரேமா ஆகிய மகள்களும் உள்ளனர். வெகுசீக்கிரமே, கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளரானதால் வேலையை விட்டுவிட்டு சென்னைக்குப் போய்விட்டார். அரசியலுக்காக சென்னையில் சட்டம் படித்தவர், நீதிமன்றத்துக்குச் செல்லாமல் ‘ஜனசக்தி’யில் கட்டுரை எழுதுவது, பொதுக்கூட்டம் என்று இயங்கிவந்தார். காரைக்குடியில் பள்ளி ஆசிரியையாக இருந்த மனைவி அனுப்பிவைத்த சம்பளத்திலேயே இவரது ஜீவனம் நடந்தது. 2012-ல் மறைந்துவிட்டார்
கட்சியிலிருந்து நீக்கப்பட்டபோது, தோழர் டாங்கே, கல்யாணசுந்தரம்,கூத்தகுடி சண்முகம் போன்றவர்களோடு சேர்ந்து ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கியவர். 1983 முதல் 2000 வரையில் அதன் மாநிலச் செயலாளராக இருந்தார். சட்ட மன்றத்துக்கு 6 முறை, நாடாளுமன்றத்துக்கு 3 முறை என 9 தேர்தல்களில் போட்டியிட்ட தா.பாண்டியன் ஒருமுறை கூட தன் கட்சிச் சின்னத்தில் வென்றதில்லை. ஆனால், தனிக்கட்சி நடத்திவந்த காலகட்டத்தில் வடசென்னையில் கை சின்னத்தில் போட்டியிட்டு இருமுறை எம்பி ஆகியிருக்கிறார்.
செத்துப்பிழைத்தவர்
சிறந்த மொழிபெயர்ப்பாளர். இந்திரா காந்தி தொடங்கி ராஜீவ் காந்தி வரையில் பலரது பேச்சுகளை மேடையில் மொழிபெயர்த்திருக்கிறார். 1991 மே 21-ல் குண்டுவெடிப்பில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தின்போது அவருக்குப் பின்னால் இருந்த தா.பாண்டியனும் தூக்கிவீசப்பட்டார். பத்திரிகையில் வெளியான இறந்த 19 பேர் பட்டியலில் முதலில் இவரது பெயரும் இடம்பெற்றது. போலீஸ் அதிகாரிகளும் வீட்டுக்கு போன் செய்து அவர் இறந்ததாகச் சொல்லிவிட்டார்கள். சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அதிசயமாக உயிர்பிழைத்தார் தா.பா. அங்கேதான் ராஜீவின் உடல் வைக்கப்பட்டிருந்தது என்பதால், அந்த மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தியின் பெயரைச் சூட்டக் காரணமாகவும் இருந்தார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, விடுதலைப்புலிகளைக் கடுமையாக எதிர்த்தார். ஆனால், ஈழத் தமிழர்களின் உரிமைக்காக நெடுமாறனுடன் சேர்ந்தும் தொடர்ந்து குரல் கொடுத்தார். பிடிவாதக்காரர் சென்னை துறைமுகத்தில் தினக்கூலித் தொழிலாளர்கள் 58 பேர் நீதிமன்றத்தை நாடி, 1992-ல் பணி நிரந்தர உத்தரவு பெற்றனர். அதை ஏற்காமல் அப்போதைய இயக்குநர் மேல்முறையீடு செய்ததால், அதைக் கண்டித்து காலவரையறையற்ற உண்ணாவிரதம் இருந்தார் தா.பாண்டியன் அப்போது ஆளுங்கட்சியாக இருந்த, இவரது கூட்டணியில் இருந்த அதிமுகவும், காங்கிரஸும் கேட்டுக்கொண்டும் தன் பிடிவாதத்தைக் கைவிடவில்லை. கடைசியில், வழக்கை வாபஸ் பெற்று 58 பேரையும் பணிநிரந்தரம் செய்தது துறைமுகக் கழகம். எளிமையிலும் பிடிவாதம். இப்போதும்கூட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதையே வழக்கமாக வைத்திருந்தார்
ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை 2000-ல் கலைத்துவிட்டு தாய்க் கட்சியில் மீண்டும் இணைந்தார். 2005-ல் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து மும்முறை அப்பொறுப்புக்குத் தேர்வுசெய்யப்பட்டவர், 2015 வரையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார்.நான் சிறுவயதில் பள்ளியில் பயின்ற காலத்தில் அப்போது ஒரு மாநாட்டில் எனக்கு மிகப்பெரிய மைகூடு பரிசளித்தார்.பின் அவருடைய ஏழு மேடைகளில் நானும் கலந்து கொண்டு பேசியுள்ள நிகழ்வுகள் இப்போதும் மறக்க முடியாத மாமா மறைந்தது பேரிழப்பு கம்யூனிஸ்ட்களின் சித்தாந்தப் படி அவருக்கு நமது பப்ளிக ஜஸ்டிஸ் சார்பில் வீரவணக்கம் கண்ணீருடன் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறோம்.
கருத்துகள்