பிரதமர் அலுவலகம் ஸ்ரீ ஹரி கோவிலுக்கு வருகை புரிந்த பிரதமர்
ஒரகண்டியில் சமுதாய வரவேற்பை ஏற்றுக் கொண்டார்
வங்கதேசத்தில் தமது இரண்டாவது நாள் பயணத்தின் போது ஒரகண்டியில் உள்ள ஹரி மந்திர் என்றழைக்கப்படும் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, மதிப்பிற்குரிய தாகூர் குடும்பத்தின் வாரிசுகளுடன் உரையாடினார்.
ஸ்ரீ ஸ்ரீ ஹரி சந்த் தாகூர் அவர்கள் சமூக சீர்திருத்தங்களுக்காக தமது புனிதமான செய்தியை வழங்கிய ஒரகண்டியில் உள்ள மத்வா சமூகத்தின் பிரதிநிதிகளோடு பிரதமர் உரையாடினார்.
தங்களது வளர்ச்ச்சியின் மூலமாக உலகத்தின் மேம்பாட்டை காண இந்தியா மற்றும் வங்கதேசம் விரும்புவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். நிலையற்றத்தன்மை, பயங்கரவாதம் மற்றும் அமைதியின்மைக்கு பதிலாக நிலைத்தன்மை, அன்பு மற்றும் அமைதியை இரு நாடுகளும் விரும்புவதாக கூறிய அவர், இதே மாண்புகளை தான் ஸ்ரீ ஸ்ரீ ஹரி சந்த் தாகூர் அவர்களும் வழங்கினார் என்றார்.
அனைவருடன் இணைந்து அனைவருக்கான வளர்ச்சியை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறதென்றும், இதில் வங்கதேசம் சகபயணி என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
அதே சமயம், வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான சிறந்த உதாரணமாக வங்கதேசம் விளங்குவதாகவும், இந்த முயற்சிகளில் வங்கதேசத்தின் சகபயணியாக இந்தியா விளங்குவதாகவும் அவர் கூறினார்.
ஒரகண்டியில் உள்ள பெண்களுக்கான நடுநிலை பள்ளியை மேம்படுத்துவது, ஆரம்ப பள்ளி ஒன்றை அங்கு நிறுவுவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை பிரதமர் வெளியிட்டார்.
ஸ்ரீ ஸ்ரீ ஹரி சந்த் தாகூரின் பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாடப்படும் பருனி ஸ்னானில் பங்கேற்பதற்காக எண்ணற்ற மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஒரகண்டிக்கு பயணம் மேற்கொள்வதை குறிப்பிட்ட பிரதமர், இப்பயணத்தை எளிதாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.பின்னர்
ஜேசோரேஷ்வரி காளி சக்தி பீடத்தில் பிரதமர் பூஜை
இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, தமது இரண்டாவது தினத்தை காளி தேவியின் ஆசீர்வாதத்துடன் துவக்கினார்.
பாரம்பரிய புராணங்களின்படி 51 சக்தி பீடங்களுள் ஒன்றான சத்கிராவில் உள்ள ஜேசோரேஷ்வரி காளி சக்தி பீடத்தில் பிரதமர் பூஜை செய்தார். தங்க முலாம் பூசப்பட்ட, வெள்ளியினாலான கைவினை கிரீடத்தை அவர் காளி தேவிக்கு காணிக்கையாக செலுத்தினார். உள்நாட்டு கைவினைக் கலைஞரால் சுமார் 3 வார காலங்களில் இந்த கிரீடம் தயாரிக்கப்பட்டது.
நட்பின் அடையாளமாக, ஆலயத்துடன் இணைந்த சமூக அரங்கத்துடன் கூடிய புயல் பாதுகாப்பு வளாகத்தை அமைப்பதற்கு உதவுவதாக பிரதமர் அறிவித்தார். வருடந்தோறும் நடைபெறும் காளி பூஜை மற்றும் கோவில் விழாக்களின் போது பக்தர்கள் பயன்படுத்துவதற்கும், அனைத்து நம்பிக்கைகளைக் கொண்ட சமூகங்கள் பயன்படுத்தும் வகையில் புயல் பாதுகாப்பு வளாகமாகவும் சமூக வசதிகள் கொண்டதாகவும் இந்தக் கட்டமைப்பு இருக்கும்.
கருத்துகள்