சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட் தடுப்புமருந்து வழங்கல் நடவடிக்கை மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான தயார் நிலை குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய சுகாதார செயலாளர் ஆய்வு
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார செயலாளர்கள், தேசிய சுகாதார இயக்கத்தின் மாநில இயக்குநர்கள் மற்றும் மாநில தடுப்பு மருந்து அலுவலர்கள் ஆகியோருடன் காணொலி மூலம் உயர்மட்ட கூட்டம் ஒன்றை மத்திய சுகாதார செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் மற்றும் தேசிய சுகாதார முகமையின் தலைமை செயல் அதிகாரியும் கொவிட் தடுப்பு மருந்து வழங்கலுக்கான அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் தலைவருமான டாக்டர் ஆர்எஸ் ஷர்மா இன்று நடத்தினார்.
நாடு முழுவதும் நடைபெற்று வரும் தடுப்பு மருந்து வழங்கல் செயல்பாடுகளின் நிலைமை, வேகம் மற்றும் பிரச்சினைகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காகவும், 2021 ஏப்ரல் முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ள நிலையில் அதுகுறித்த தயார்நிலை குறித்தும் விவாதிப்பதற்காக இக்கூட்டம் நடத்தப்பட்டது.
கொவிட் பாதிப்புகள் அதிகமாக பதிவாகி வரும் மாவட்டங்களில் குறைவாக தடுப்பூசி போடப்படும் பகுதிகளை அடையாளம் காண்பதும், சரியான நடவடிக்கைகளை எடுப்பதும் இக்கூட்டத்தில் முக்கிய நோக்கமாக இருந்தது.
சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்புமருந்து வழங்கலின் போது பின்வருவனவற்றை கடைபிடிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது:
1. தகுதியுடைய சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் மட்டுமே பதிவு செய்துகொண்டு தடுப்பு மருந்து பெறுதலை உறுதி செய்தல்.
2. தவறான பதிவுகளை கோவின் தளத்தில் சேமித்து வைத்தல்.
3. சரியான நடவடிக்கைக்காக குறைந்த அளவு தடுப்பு மருந்து வழங்கப்படும் பகுதிகளை அடையாளம் காணுதல்.
4. இந்த பிரிவுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பு மருந்து வழங்குதல்.
தனியார் தடுப்பு மருந்து வழங்கும் மையங்கள் தொடர்பாக, திறன் பயன்படுத்துதல் குறித்து அடிக்கடி ஆய்வுகள் நடத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. தடுப்பு மருந்து விநியோகம் மற்றும் வழிகாட்டுதல்கள் தொடர்பான தனியார் மையங்களின் சந்தேகங்களை களையவும் அறிவுறுத்தப்பட்டது.
தடுப்பு மருந்துகள் எந்த நிலையிலும் தேங்கி விடாமல் பார்த்துக் கொள்ளுமாறும், தடுப்பு மருந்துகளின் சேமிப்பு மற்றும் விநியோகம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யுமாறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டன.
தடுப்புமருந்து வீணாதல் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதை உறுதி செய்யுமாறும், தடுப்பு மருந்து வீணாதல் குறித்து அனைத்து மட்டங்களிலும் தொடர்ந்து ஆய்வு செய்யுமாறும், தடுப்பு மருந்துகளை சரியான நேரத்தில் பயன்படுத்துவதை உறுதி செய்யுமாறும், தடுப்பு மருந்து பயன்படுத்தியது குறித்த தரவுகளை கோவின் மற்றும் ஈவின் தளங்களில் முறையாக பதிவு செய்யுமாறும் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டன.
தடுப்பு மருந்துகளை சேமித்து வைப்பதிலும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதிலும் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று டாக்டர் ஆர்எஸ் ஷர்மா உறுதி அளித்தார். இரண்டாம் டோசுக்காக தடுப்பு மருந்துகளை சேமித்து வைப்பதில் எந்த பயனும் இல்லை என்றும் தேவையுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் தடுப்பு மருந்துகளை மாநிலங்கள் முறையாக விநியோகம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கருத்துகள்