‘விடுதலையின் அம்ருத் மகோத்சவம புகைப்பட கண்காட்சி
நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு நடத்தப்படும் ‘விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தின்’ புகைப்பட கண்காட்சி கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்வி அகாடமி (KAHE) வளாகத்தில், 2021 மார்ச் 29 ஆம் தேதி முதல், மார்ச் 31 ஆம் தேதி வரை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையின், கோவை மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் கற்பகம் உயர்கல்வி அகாடமி ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகிறது.
கற்பகம் உயர்கல்வி அகாடமியின் துணை வேந்தர் டாக்டர் எஸ்.சுடலைமுத்து தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, அமைதியின் அடையாளமான புறாவை நேற்று பறக்கவிட்டார். மேலும், புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து, வாக்களித்தலின் முக்கியத்துவம் குறித்த கையெழுத்து பிரச்சாரத்தையும் அவர் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
பதிவாளர் டாக்டர் எம்.பழனிச்சாமி சுதந்திரத்தின் நன்மைகள் குறித்து பேசினார். கலை, அறிவியல் மற்றும் மானுடவியல் பிரிவின் டீன் டாக்டர் என்.வி.பாலாஜி, இந்த கண்காட்சியை பாராட்டி பேசினார்.
கூட்டத்தில் பேசிய தலைமை விருந்தினர், டாக்டர் எஸ்.சுடலைமுத்து, சமூகத்தில் சுதந்திரம் முக்கிய பங்காற்றுகிறது எனவும், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளதாகவும் கூறினார். இதற்கு நமது சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்புதான் காரணம் என அவர் தெரிவித்தார். தேசிய தலைவர்களின் சிறந்த நடைமுறைகள் கற்பிக்கப்பட்டு, முன்மாதிரியாக எடுத்துச் செல்லப்பட வேண்டும் என அவர் கூறினார். நாட்டின் வளர்ச்சிக்கு, நமது பங்களிப்பை ஏதாவது சில வழிகளில் நாம் அளிக்க வேண்டும் எனவும், அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். நாட்டின் வளர்ச்சி மற்றும் ஒற்றுமைக்கு குடிமக்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானது என அவர் கூறினார்.
கண்காட்சியின் மையக் கருத்து மற்றும் சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது, தேசிய தலைவர்களையும், சுதந்திர போராட்ட வீரர்களை மதிப்பது குறித்து கோவை மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் உதவி இயக்குநர் திருமதி கரீனா பி. தெங்கமம் பேசினார்.
கற்பகம் உயர்கல்வி அகாடமியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு, தேசிய தலைவர்களின் புகைப்படங்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். புகைப்படங்களை பார்வையிடும்போது, கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் அனைவராலும் பின்பற்றப்பட்டது.
மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் கள விளம்பர உதவியாளர் திரு எஸ்.ஆர்.சந்திரசேகரன், விரிவாக்க நிகழ்ச்சிகளின் இயக்குநர் டாக்டர்.ஏ.தர்மராஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு கற்பகம் உயர்கல்வி அகாடமியின் என்எஸ்எஸ் மாணவர்கள் உதவினர்.
‘இந்தியாவின் அம்ருத் மகோத்சவம்’
இந்தியாவின் 75வது சுதந்திரதின ஆண்டை குறிக்கும் அம்ருத் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, இந்திய உணவுக் கழகத்தின் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் குழு விவாதம், தென்மண்டல நிர்வாக இயக்குனர் திரு ஆர்.டி.நசீம் தலைமையில் இந்திய உணவுக் கழகத்தின் தென் மண்டல அலுவலகத்தில் இன்று நடைப்பெற்றது.
கொவிட் தொற்று நேரத்தில், நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய உணவுக் கழகம் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை தென்மண்டல நிர்வாக இயக்குனர் ஆர்.டி. நசீம் விளக்கினார். ஓய்வு பெற்ற அதிகாரிகள் திரு ஆர் பாலகிருஷ்ணன், திரு பி பாலசுப்ரமணியன், திரு மஞ்சப்பன், திரு மலையப்பன், திரு சுந்தரராஜன், திரு. அகோரம், திரு ஜெகதீசன், திரு.பழனிவேல், திரு. பிள்ளை ஆகியோர் இதில் கலந்துக் கொண்டு நாட்டின் உணவு பாதுகாப்புக்கு இந்திய உணவு கழகத்தின் பங்களிப்பு தொடர்பான தலைப்புகளில் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
நாடு சந்திக்கும் உடனடி சவால்கள் குறித்தும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் உணவு தானியங்கள் கிடைப்பது குறித்தும் தென்மண்டல நிர்வாக இயக்குனர் திரு ஆர்.டி.நசீம் பேசினார்.
அரிசி, கோதுமைக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள் பயிரிடுவதிலும் விவசாயிகள் ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இது தண்ணீரை அதிகம் சார்ந்திருப்பதையும், தற்போது தேவைக்கு அதிகமாக அரிசி, கோதுமை இரு மடங்கு இருப்பு வைத்திருப்பதையும் குறைக்கும் என்றார் அவர்.
எதிர்காலத்தில் உணவு மட்டும் அளிக்காமல், ஊட்டச்சத்தையும் அதிகரிக்கும் விதத்தில், ரேசன் கடைகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது என அவர் கூறினார்.
இது நமது மக்கள் தொகையின் ஊட்டசத்து நிலவரத்தில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
தலைமை பொது மேலாளர் திரு எம்.துளசிதாஸ், பொது மேலாளர்கள் திரு வி.ஹரிவிக்ரமன், திருமதி சைனி வில்சன், திருமதி பாரதி, திரு ஜக்கிருதீன், டாக்டர் வி.ஏழுமலை ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கருத்துகள்