பாதுகாப்பு அமைச்சகம் கொவிட்-19 நிலைமையை எதிர்கொள்வதற்காக உள்ளூர் நிர்வாகங்களுக்கு உதவ கடற்படையின் மேற்கு பிரிவு தயாராக உள்ளது
அதிகரித்து வரும் கொவிட்-19 பாதிப்புகளின் காரணமாக மருத்துவமனை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி வரும் நிலையில், இந்திய கடற்படையின் மேற்கு பிரிவின் கீழ் உள்ள 3 மருத்துவமனைgalaana- ஐஎன்எச்எஸ் ஜீவந்தி, கோவா; ஐஎன்எச்எஸ் பதஞ்சலி, கார்வார்; மற்றும் ஐஎன்எச்எஸ் சந்தானி, மும்பை ஆகியவை உள்ளூர் நிர்வாகத்தின் பயன்பாட்டிற்காக சில கொவிட் படுக்கைகளை தயார் நிலையில் வைத்துள்ளன.
இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லாமல் இருப்பதற்காக மும்பையில் உள்ள கடற்படை வளாகங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் கடற்படை அதிகாரிகள், தேவை ஏற்படும் பட்சத்தில் எந்த விதமான கொவிட் அவசரகால உதவியையும் செய்யத் தயாராக இருப்பதோடு, அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.
கார்வாரில் உள்ள கடற்படை அதிகாரிகளும் இதேபோன்று விரிவான வசதிகளை செய்துள்ளதோடு, சுமார் 1,500 இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், ரேஷன் பொருட்கள் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகளை அளித்துள்ளனர். கொவிட்-19 பாதிப்புள்ள பொதுமக்களுக்கு கடந்த வருடம் சிகிச்சை அளித்த முதல் பாதுகாப்பு படைகள் மருத்துவமனையான ஐஎன்எச்எஸ் பதஞ்சலி, அவசரகால தேவை எதேனும் ஏற்பட்டால் பொதுமக்களில் உள்ள கொவிட் நோயாளிகளை அனுமதிக்க தயாராக உள்ளது.
கொவிட்-19 முதல் அலையின் போது சமுதாய சமையல் அறைகளை அமைத்த கோவாவில் உள்ள கடற்படையினர், அதேபோன்ற உதவியை தற்போதும் வழங்க தயாராக உள்ளனர். மேலும், ஐஎன்எச்எஸ் ஜீவந்தியில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகளில் சிலவற்றை பொதுமக்களுக்காக ஒதுக்கியுள்ள கோவா பிராந்திய கடற்படை தலைமையகம், உள்ளூர் நிர்வாகத்திடம் இருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் பொதுமக்களுக்கான மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜன் வழங்குவதற்கு திட்டமிட்டு வருகிறது.
முக்கியமான மருந்து பொருட்கள் மற்றும் கொவிட் பாதிப்புள்ள பகுதிகளுக்கு உபகரணங்களை எடுத்துச் செல்லுதல், ஏழைகளுக்காக சமுதாய சமையல் அறைகளை அமைத்தல் மற்றும் இதர தொழில்நுட்ப உதவியை வழங்குதல் என உள்ளூர் நிர்வாகத்திற்கு குஜராத் கடற்படைப் பிரிவு ஆதரவளித்து வருகிறது.
தற்சமயம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, கடற்படை மற்றும் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு தடுப்பூசிகளை அனைத்து கடற்படை மருத்துவமனைகளும் வழங்கி வருகின்றன. அருகில் வசிக்கும் பொதுமக்களில் 18 வயது நிரம்பியவர்களுக்கு 2021 மே 1-ல் இருந்து தடுப்பூசிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொவிட் காரணமாக அமைக்கப்பட்டுவரும் மருத்துவமனைகளுக்கு குறுகிய கால அவகாசத்தில் அனுப்புவதற்காக மருத்துவம் மற்றும் போர்க்கள செவிலியர் பயிற்சி பெற்ற மருத்துவம் சாராத பணியாளர்களை தயார் நிலையில் மும்பையில் உள்ள ஐஎன்எச்எஸ் அஸ்வினி வைத்துள்ளது.
கொவிட்-19 நிலைமையை எதிர்கொள்வதற்காக உள்ளூர் நிர்வாகங்களுக்கு உதவ கடற்படையின் மேற்கு பிரிவு தயாராக உள்ள நிலையில், களத்திலுள்ள கடற்படை பிரிவுகள் கடல்சார் பாதுகாப்பின் நிலைத் தன்மையை உறுதி செய்து வருகின்றன. பிரான்ஸ் கடற்படை உடனான வருணா 21 உள்ளிட்ட கூட்டுப் பயிற்சிகளில் மேற்கு கடற்படை பிரிவில் படைகள் சமீப நாட்களில் பங்கெடுத்து வருகின்றன. மேலும், மங்களூருக்கு அருகே தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், கடல் மார்க்கமாக கடத்தப்படும் போதை மருந்துகள் பறிமுதல், மற்றும் அரேபிய கடல் வழியாக செல்லும் இந்திய வியாபார கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கொள்ளையர்களுக்கு எதிரான ரோந்துகள் உள்ளிட்டவற்றிலும் மேற்குக் கடற்படைப் பிரிவு ஈடுபட்டு வருகிறது.
கருத்துகள்