மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கிலோ போதைப்பொருள் பறிமுதல் - இருவர் கைது
போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சென்னை மண்டல அதிகாரிகள் சென்னை கிண்டியில் உள்ள கொரியர் அலுவலகத்தில் இருந்து 0.990 கிலோ அம்பேட்டமைனை 2021 ஏப்ரல் 24 அன்று பறிமுதல் செய்தனர்.
கிரிக்கெட் கையுறைகள் மற்றும் தொடைக் கவசங்களை கொண்ட பார்சலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஆக்லாந்திற்கு இந்த பார்சல் செல்லவிருந்தது. போதைப்பொருளை பரிசோதித்த போது அது மிக தீவிர அம்பேட்டமைன் என தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, சென்னை மண்டல இயக்குநர் திரு அமித் கவாதே மேற்பார்வையில் எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கையின் காரணமாக சென்னையை சேர்ந்த அஷ்வின் டி மற்றும் சுரேந்திரன் சி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் வலைப்பின்னலை கண்டறிவதற்காக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சென்னை மண்டல இயக்குநர் திரு அமித் கவாதே, கண்காணிப்பாளர் திரு ஆர் பிரகாஷ் மற்றும் இதர அலுவலர்களை அவர்களது அர்ப்பணிப்பு மிக்க முயற்சிகளுக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு பாராட்டுகிறது.
கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் போதைப்பொருளான அம்பேட்டமைன் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இதன் பக்க விளைவுகள் உடல் நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியவை. தொடர்ந்து பயன்படுத்தினால் மாரடைப்பு, நினைவு இழத்தல், இல்லாததை இருப்பது போலத் தோன்றும் தோற்றம் மற்றும் வலிப்பு போன்றவை ஏற்படலாம்.
மேற்கண்ட தகவல்களை செய்திக் குறிப்பு ஒன்றில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சென்னை மண்டல இயக்குநர் திரு அமித் கவாதே தெரிவித்துள்ளார்.
கருத்துகள்