பாதுகாப்பு அமைச்சகம் இந்திய விமானப் படை தலைமைத் தளபதியின் வங்க தேச பயணம்
வங்கதேசத்தின் விமானப்படை தலைமை தளபதி ஏர் மார்ஷல் ஷேக் அப்துல் ஹன்னான் விடுத்திருந்த அழைப்பின் பெயரில் இந்திய விமானப் படையின் தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர்கேஎஸ் பதௌரியா, வங்கதேச விமானப்படை அகாடமியில் ஜூன் 28 அன்று ‘ஆளுநர் அணிவகுப்பு 2021ஐ’ முன்னிட்டு நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சி மற்றும் வீரர்கள் ராணுவத்தில் இணையும் விழாவில் கலந்து கொண்டார்.
வங்கதேச விடுதலையின் பொன்விழாவை முன்னிட்டு இந்த 2 நாள் பயணம் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. வெளிநாட்டு தளபதி ஒருவர் அணிவகுப்பை பார்வையிட்டு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும். இந்தியா மற்றும் வங்கதேச ஆயுதப் படைகளுக்கு இடையேயான நட்புணர்வு மற்றும் நம்பிக்கையை இந்த நடவடிக்கை மேலும் வலுப்படுத்துகிறது.
பயிற்சியை நிறைவு செய்யும் வீரர்களிடையே உரையாற்றிய இந்திய விமானப்படையின் தலைமைத் தளபதி, சிறப்பான அணிவகுப்பில் ஈடுபட்டதற்காக அவர்களைப் பாராட்டியதோடு, இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க நட்புறவில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கிய தூணாக விளங்குவதன் மூலம் பாதுகாப்பு இடையீடுகளின் அனைத்து அம்சங்களிலும் விரைவான வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிதலின் அடிப்படையில் இரண்டு நாட்டு விமான படைகளின் தலைசிறந்த தொழில் நிபுணத்துவ உறவுமுறையின் பிரதிபலிப்பாக இந்த நிகழ்ச்சியை அவர் வர்ணித்தார். வங்கதேசத்தின் 50-வது ஆண்டு விடுதலையின் போது அந்நாட்டின் விமானப்படை அகாடமிக்கு வந்திருப்பது, ஏற்கனவே வலுவாக உள்ள இருநாடுகளின் பன்முகத் தன்மை வாய்ந்த கூட்டணிக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தமது பயணத்தின்போது வங்கதேச விமானப் படை தலைமைத் தளபதி, ராணுவத் தளபதி, ஆயுதப்படைகள் பிரிவின் முதன்மை அதிகாரி ஆகியோருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக ஏர் சீஃப் மார்ஷல் ஆர்கேஎஸ் பதௌரியா ஆலோசனை நடத்தினார். டாக்காவில் அவர் தங்கியிருந்தபோது இந்திய தூதர் மேதகு விக்ரம் கே துரைசுவாமியுடனும் அவர் கலந்துரையாடினார்
கருத்துகள்