குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மதிப்பீட்டு முறை, தகவல் பலகையை உருவாக்க மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மதிப்பீட்டு முறை, தகவல் பலகையை உருவாக்க மத்திய அமைச்சர் திரு நிதின் கட்காரி வலியுறுத்தல்
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான திட்டங்களை முறையாகக் கண்காணிப்பதற்கு தகவல் பலகையும், அவற்றிற்கான மதிப்பீட்டு முறையும் உருவாக்கப்பட வேண்டும் என்று மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்காரி வலியுறுத்தியுள்ளார். இந்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வர்த்தக சபையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வலைதளக் கருத்தரங்கில் உரையாற்றிய அவர், சிறந்த வர்த்தகத்தை மேற்கொள்ளும் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி ஆவணங்களைப் பெற்றுள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து நிதி உதவியைப் பெறுவதற்கு வசதியாக, அவற்றிற்கு மதிப்பீடு வழங்குவதற்கு எளிமையான மற்றும் வெளிப்படைத்தன்மை வாயிலான செயல்முறை வகுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். பல்வேறு உலக நாடுகள் இந்திய தொழில்துறையில் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதாகவும், இதுபோன்ற திறமையான மதிப்பீட்டு முறையினால் வெளிநாடுகளில் இருந்து சிறந்த முதலீடுகள் கிடைக்கக்கூடும் என்றும் அமைச்சர் கூறினார்.
முடிவுகளை எடுப்பதில் ஏற்படும் காலதாமதத்தைக் குறைப்பதற்காக, திட்டங்களைக் கண்காணிப்பதற்கு தகவல் பலகை உருவாக்கப்பட வேண்டும் என்று திரு கட்காரி குறிப்பிட்டார். மூன்று மாதங்களுக்குள் முடிவு செய்து ஆதரவு அளிக்குமாறு இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியை அவர் கேட்டுக் கொண்டார். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையான தற்சார்பு இந்தியா இலக்கை அடைவதில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். வெளிப்படைத்தன்மை வாயிலான, உரிய காலத்திற்குள் நிறைவேற்றும் வகையில், செயல்திறன் மற்றும் பயன்களின் அடிப்படையிலான முறையை உருவாக்கி, சிறப்பாகப் பணியாற்றும் தொழில்முனைவோர் பயனடையும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திரு கட்காரி வலியுறுத்தினார். தனித்து இயங்காமல், ஒன்றிணைந்து செயல்படுவதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு மாறுபட்ட யோசனைகள், புதிய தொழில்நுட்பம், வேளாண்மை, ஊரக மற்றும் பழங்குடித் துறைகளில் ஆராய்ச்சி முதலியவை மிகவும் முக்கியம் என்றார் அவர்.
நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் 30% பங்களிப்பை வழங்கி, சுமார் 11 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன், வேளாண் துறைக்கு அடுத்தபடியாக மிகப்பெரும் துறையாக விளங்குவதாக அமைச்சர் கூறினார்.
கருத்துகள்