நித்தி ஆயோக் இந்தியாவில் லாப நோக்கில்லா மாதிரி மருத்துவமனை குறித்த ஆய்வறிக்கை: நிதி ஆயோக் வெளியீடு
லாப நோக்கில்லா மருத்துவமனை தொடர்பான துறையில் கொள்கைகளை வலுப்படுத்தவும், இதுபோன்ற நிறுவனங்கள் பற்றிய தகவல்களில் நிலவும் இடைவெளியைக் குறைக்கவும், லாப நோக்கில்லா மாதிரி மருத்துவமனை குறித்த விரிவான ஆய்வறிக்கையை நிதி ஆயோக் இன்று வெளியிட்டது.
“மருத்துவத் துறையின் விரிவாக்கத்தில் தனியார் நிறுவனங்களிடையே குறைந்த முதலீடுகளே காணப்படுகிறது. நேற்று அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை தொகுப்பு, இந்த நிலை மாறுவதற்கான வாய்ப்புகளை நமக்கு வழங்குகிறது. லாப நோக்கில்லாத துறை பற்றிய ஆய்வு, அந்தப் பாதையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறிய முயற்சியாகும்”, என்று நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால் கூறினார்.
நிதி ஆயோக்கின் தலைவரும் நிர்வாக அதிகாரியுமான திரு அமிதாப் கண்ட் முன்னிலையில், கூடுதல் செயலாளர் டாக்டர் ராகேஷ் சர்வால், நாடு முழுவதுமிருந்து இந்த ஆய்வில் பங்கேற்ற மருத்துவமனைகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், டாக்டர் வி கே பால் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டார்.
லாப நோக்கில்லாத மாதிரி மருத்துவமனைகளின் செயல்பாடுகளை இந்த ஆய்வறிக்கை எடுத்துரைக்கிறது. சேவை என்ற பிரிவின் கீழ் உள்ள இதுபோன்ற மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையிலான முடிவுகளை இந்த அறிக்கை வெளியிட்டிருப்பதுடன், இதனை, தனியார் மருத்துவமனைகள் மற்றும் மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களுடன் ஒப்பீடும் செய்யப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவத் துறையின் செயல்பாடுகள் குறித்து நிதி ஆயோக் விரிவான ஆய்வை மேற்கொண்டு வருகிறது. லாப நோக்கத்துடன் செயல்படும் மருத்துவ நிறுவனங்கள் பற்றி போதிய தகவல்கள் இருந்து வரும் நிலையில், தரமான மருத்துவம் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் சேவையாற்றும் லாப நோக்கில்லா நிறுவனங்கள் குறித்த நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்கள் மிகவும் குறைவு.
லாப நோக்கில்லா மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படும் கட்டணக் குறைவு உத்திகள் பற்றி இந்த அறிக்கை விரிவாக விவாதிக்கிறது. இது போன்ற நிறுவனங்களின் இயக்கத்திற்கு சுமையாகவும், வளர்ச்சிக்கு இடையூறாகவும் விளங்கும் சவால்களையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஆய்வறிக்கையைக் காண: https://niti.gov.in/sites/default/files/2021-06/Not-for-profitHospitalReport.pdf
கருத்துகள்