குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பு மருந்து உருவாக்கத்தை துரிதப்படுத்துங்கள்: குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்
குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பு மருந்து உருவாக்கத்தை துரிதப்படுத்துங்கள்: அறிவியல் சமூகத்தினருக்கு குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்
குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பு மருந்து உருவாக்கத்தை துரிதப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு அறிவியல் சமூகத்தினரை குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தினார். வைரசிடம் இருந்து குழந்தைகளை காப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கை நாடு தழுவிய மக்கள் இயக்கமாக இருக்க வேண்டும் என்று கூறிய திரு நாயுடு, தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு மக்களை கேட்டுக்கொண்டார்.
ஹைதராபாத்தின் ஜெனோம் வேலி பகுதியில் உள்ள பாரத் பயோடெக் லிமிடெட் நிறுவன ஆலையை பார்வையிட்ட பின்னர் விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்களிடையே பேசிய அவர், “தடுப்பு மருந்து தயக்கத்திற்கு இடமில்லை” என்றார். ஒவ்வொருவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென்றும், நம்மையும் நம்மை சுற்றியிருப்பவர்களையும் பாதுகாக்க இதை விட சக்தி வாய்ந்த வழி வேறெதுவும் இல்லை என்றும் திரு நாயுடு கூறினார்.
கொவிட்-19 பாதிப்புகள் தற்காலிகமாக குறைந்திருப்பதால் அஜாக்கிரதையுடன் இருக்கக் கூடாது என்று மக்களை கேட்டுக்கொண்ட திரு நாயுடு, கொவிட் விதிமுறைகளை மீறாமல் பொறுப்புள்ள மக்களாக நாம் நடந்து கொள்வோம் என்று கூறினார். முகக் கவசங்களை அணியுமாறும், தனிநபர் இடைவெளி மற்றும் சுகாதாரத்தை கடைபிடிக்குமாறும் மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சரியான கொவிட் நடத்தை விதிமுறையை பின்பற்ற வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தினார். “பொறுப்புடன் நடந்து கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். மூன்றாவது அலையை நாம் வரவேற்கக் கூடாது,” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
உலகத்தின் மருந்தகம் எனும் சர்வதேச பாராட்டை இந்தியா பெற்றிருப்பதாகவும், 50 சதவீத தடுப்புமருந்தை இந்தியா விநியோகிப்பதாகவும், பொது மருந்துகளின் மிகப்பெரிய உற்பத்தியாளராக இருப்பதாகவும் அவர் கூறினார். எய்ட்ஸை கட்டுப்படுத்தும் மருந்துகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை இந்திய மருந்து நிறுவனங்கள் விநியோகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தெலங்கானா உள்துறை அமைச்சர் திரு முகமது மஹமூத் அலி, பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் கிருஷ்ணா யெல்லா, இணை நிர்வாக இயக்குநர் திருமதி சுசித்ரா யெல்லா, முழு நேர இயக்குநர் டாக்டர் கிருஷ்ண மோகன் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.
கருத்துகள்