ஆயுஷ் பல நாடுகளில் ஆயுஷ் மருந்துகள் பிரபலம்: மத்திய அமைச்சர் தகவல்
பல நாடுகளில் ஆயுஷ் மருந்துகள் பிரபலமடைந்துள்ளதாக ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் கூறியுள்ளார்.
அவர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
சுகாதாரம், உடல்தகுதி மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது. ஆயுர்வேதம், யோகா போன்றவற்றுக்கான தேவை, சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது. நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், சவுதி அரேபியா, பஹ்ரைன், மலேசியா, மொரிஷியஸ், ஹங்கேரி, செர்பியா, தான்சானியா, சுவிட்சர்லாந்து, கியூபா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் ஆயுர்வேதம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ருமேனியா, ஹங்கேரி, லத்வியா, செர்பியா மற்றும் ஸ்லோவேனியாவில் ஆயுர்வேத மருத்துவ முறை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. வங்கதேசம், இலங்கை, மலேசியா, பாகிஸ்தான், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தான்சானியாவில் யுனானி முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மலேசியாவில் சித்தா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சோவா ரிக்பா மருத்துவ முறை, பூட்டான் மற்றும் மங்கோலியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா மற்றும் தான்சானியாவில் ஹோமியோபதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கானா, சிலி, கொலம்பியா, ருமேனியா, துருக்கி, கனடா ஆகிய நாடுகளிலும் இது ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுஷ் மருந்துகள், 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆயுர்வேத மருந்துகளின் தரப்படுத்தல்:
ஆயுர்வேத, சித்தா மற்றும் யுனானி அதிகாரப்பூர்வ விதிமுறை மற்றும் ஒழுங்குமுறை தொகுப்புகளை வெளியிடுவதற்கும், மாற்றியமைப்பதற்கும் மருந்தியல் ஆணையம் பொறுப்பாகும். நாட்டில் ஆயுர்வேத மருந்துகளின் தரப்படுத்தலுக்காக, ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையத்தை அரசு நிறுவியுள்ளது. இந்திய ஆயுர்வேத மருந்தகம் (API), இந்திய சித்த மருந்தகம் (SPI), யுனானி மருந்தகம் (UPI) மற்றும் இந்திய ஹோமியோபதி மருத்தகம் (HPI) ஆகியவற்றை வெளியிடுவதும், மாற்றியமைப்பதும் ஆணையத்தின் முதன்மைப் பணி. ஆயுர்வேத, சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகளின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனை, உறுதிப்படுத்த மருந்தியல் தரநிலைகள் அடிப்படை தேவை.
சமீபத்திய ஆண்டுகளில் பாரம்பரிய மருத்துவமுறை அதிகரிப்பு:
ஆயுர்வேத மருந்து வசதிகளை, மக்கள் பயன்படுத்தும் போக்கும் அதிகரித்துள்ளது. ஆயுர்வேதாவை ஊக்குவிக்கும் பல திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் 5 ஆயுர்வேத தேசிய மையங்கள், ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ளன. அவை தரமான ஆயுர்வேத மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.
கொரோனா தொற்று பரவல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:
கொவிட்-19 சிகிச்சையில் ஆயுஷ் மருத்துவ முறைகளின் பங்கு குறித்து, பல வித ஆய்வுகளை ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய மையங்கள் மற்றும் ஆராய்ச்சி கவுன்சில்கள் நடத்தின.
கொவிட்-19 சிகிச்சைக்கு ஆயுஷ்-64 மற்றும் கபசுர குடிநீர் ஆகியவை அடையாளம் காணப்பட்டன. மிதமான கொவிட் பாதிப்புக்கு, ஆயுஷ்-64 மருந்தின் திறன் மருத்துவ பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டது. சித்தா தயாரிப்பான கபசுர குடிநீர், கொவிட்-19 சிசிகச்சைக்கான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மிதமான கொவிட் பாதிப்பு சிகிச்சைக்கு கபசுர குடிநீர் பயனுள்ளதாக இருந்தது கண்டறியப்பட்டது.
கருத்துகள்