முனைவர் பா வெங்கட்ராமன் அவர்கள் கல்பாக்கத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார்.
அவர் செயிண்ட் ஜோசப் கல்லூரி (திருச்சி) யில் இயற்பியல் முதுகலைப் பட்டம் பெற்று பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 27 ஆம் தொகுதியில் தேர்ச்சி பெற்று கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள கதிரியக்க உலோகவியல் ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளராகத் தன் தொழில் வாழ்க்கையை 1984 ஆம் ஆண்டு தொடங்கினார். இந்த மையத்தில் தனிச்சிறப்புற்ற விஞ்ஞானியாகவும், ஹோமி பாபா தேசியப் பல்கலைக்கழகத்தில் முதுனிலைப் பேராசிரியராகவும் பாதுகாப்பு, தரக்கட்டுப்பாடு மற்றும் மனிதவள மேம்பாடு இவற்றுக்கான குழுவின் இயக்குனாரகவும் இதுகாறும் இருந்து வருகிறார். 37 ஆண்டுகளாக அழிவிலா ஆய்வுச் சோதனையின் இயற்பியல் அடிப்படையில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துறைகளில் ஆய்வும் செய்து வருகிறார். அணுசக்தித் துறையில் உள்ள தொழில் நுட்பச் சவால்களுக்கு அழிவிலாச் சோதனையின் மூலம் தீர்வு காணும் திறம் பெற்றவர் இவர். இ கா அ ஆ மையத்தில் நொதுமி (நியூட்ரான்) கொண்டு எடுக்கப்பட்ட முதல் கதிரியக்க நிழற்படம் காமினி (KAMINI) என்ற அணு உலையினைக் கொண்டு இவரால் எடுக்கப்பட்டது. காமினி (KAMINI) என்ற இந்த அணு உலை இந்த ஆராய்ச்சி மையத்தின் வெற்றிப் பாதையில் ஒரு மைல் கல் ஆகும். இ கா அ ஆ மையத்தில் எக்ஸ் கதிர்களைக் கொண்டு சாதாரணமாகவும் டிஜிடல் முறையிலும் எடுக்கப்படும் படங்கள் மற்றும், வெப்ப நிலை நிழற்படங்கள் இவற்றை எடுக்கும் கருவிகளை இவரே முதன் முதலில் நிறுவினார். இவர் நிறுவிய அழிவிலாச் சோதனைக் கருவிகளும் முறைகளும் பல்வேறு தொழில் துறைகளிலும் நிறுவனங்களிலும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவரின் திறமைகளும் அறிவியல் ஆய்வுகளும் விண்வெளி ஆராய்ச்சி மையம், இராணுவத் தொழில் நுட்ப நிறுவனம் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்குப் பயனளிப்பதாக இருந்து வருகின்றது. இவர் செயற்படுத்திய அழிவிலா ஆய்வு முறைகள் தொல்பொருள் ஆய்வு, பழங்காலச் சின்னங்கள் இவற்றை ஆய்வதற்கு மட்டுமல்லாது, மார்பகப் புற்று நோய் கண்டறியும் ஆய்வுகளுக்கும் பயன் பட்டு வருகின்றன
முனைவர் வெங்கட்ராமன் அவர்கள் இந்திய அணுஆராய்ச்சித்துறையின் உயரிய விருதான, ஹோமி பாபா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப விருதினை 2007ஆம் ஆண்டு பெற்றார். இது தவிர 2008, 2009, 2010, 2011, 2012, 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் சாதனைக் குழுவிற்கான பரிசினையும் பெற்றார். 2005 ஆண்டு இந்திய அணுசக்திக் கழகத்தின் தங்கப் பதக்கத்தினையும் பெற்றார். 2001 ஆம் ஆண்டு ISNT-NDT அகில உலக அங்கீகாரத்தைப் பெற்றார். இந்திய உருக்கிணைப்பு அமைப்பின் கூரிய கருவிப் பரிசினை 2011 ஆம் ஆண்டு வென்றார். இவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் 10க்கும் மேற்பட்ட பல முறைகள் சிறந்த கட்டுரை விருதினைத் தட்டிசென்றன.
இவர் இந்திய அழிவிலா ஆய்வு இயக்கத்தின் கௌரவ உறுப்பினர் பதவியையும், சென்னை அறிவியல் இயக்கத்தின் உறுப்பினர் பதவியினையும், ஆசிய பசிபிக் அழிவிலா ஆய்வுக்கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் பதவியினையும், 14காம் ஆசிய பசிபிக் அழிவிலா ஆய்வுக் கருத்தரங்கின் தலைவர் பதவியினையும், அளவறி அகச்சிவப்புக் கதிர் ஆய்வின் ஆசியத் துணைக்குழுவின் முன்னாள் தலைவர் பதவியினையும், அழிவிலா ஆய்விற்கான அமெரிக்க இயக்கத்தின் இந்தியப்பிரிவின் தலைவர் பதவியினையும் பெற்றவர் ஆவார். இவர் பன்னாட்டு ஆய்வுப்பத்திரிக்கைகளிலும் கருத்தரங்கங்களிலும் 300க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைப் வெளியிட்டுள்ளார். இவற்றுள் என்சைக்லோபிடியா ஆப் மெட்டீரியல் சயன்ஸ் என்கிற இதழில் வெளியான இரண்டு கட்டுரைகளும், தனிப்பொருள் பற்றி வெளியிடப்பட்ட புத்தகக் கட்டுரைகள் இரண்டும், மூன்று புத்தகங்களும் அடங்கும். முனைவர் பல்தேவ் ராஜ் அவர்களுடன் இணைந்து புத்தகத்தொடர்களை நரோசா பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.
இவர் முனைவர் ஏ கே பாதுரி அவர்களுக்குப் பிறகு, இ கா அ ஆ மையத்தின் இயக்குனாரகப் பொறுப்பேற்றுள்ளார்.
கருத்துகள்