உள்துறை அமைச்சகம் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மிக்க லட்டு விநியோக திட்டம்: காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா தொடங்கி வைத்தார்
கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மிக்க லட்டு விநியோக திட்டத்தை, தனது காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இன்று கிருஷ்ண ஜெயந்தி. 5,100 ஆண்டுகளுக்கு முன்பு பகவான் கிருஷ்ணா பிறந்தார். தர்மத்தின் வழியை நாட்டுக்கு காட்ட ஒருவர் தேவைப்பட்ட நேரத்தில் பகவான் கிருஷ்ணா அவதரித்தார்.
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு வாழ்த்துகள். பகவான் கிருஷ்ணா வடிவிலான குழந்தை, ஆரோக்கியமான குழந்தையாக கருதப்படுகிறது.
இன்று முதல் காந்தி நகரில் 7,000 கர்ப்பிணி பெண்களுக்கு, தொண்டு நிறுவனங்கள் மூலமாக மாதந்தோறும் தலா 15 ஊட்டச்சத்து லட்டுகள் இலவசமாக வழங்கப்படும். இதில் அரசு செலவு இல்லை. இதற்கான செலவை தொண்டு நிறுவனங்கள் ஏற்கும்.
ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான விழிப்புணர்வை பரப்ப ராஜஸ்தானில் கடந்த 2018ம் ஆண்டு, மார்ச் 8ம் தேதி ஊட்டச்சத்து திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். ஊட்டச்சத்து குறைபாடுக்கு எதிராக, பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த பணி, இன்று மிகப் பெரிய இயக்கமாக மாறியுள்ளது. தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்காக, பிரதமர் தொடங்கிய ஊட்டச்சத்து பிரச்சாரம் நிற்காது.
ஊட்டச்சத்து குறைபாடுடன், எந்த ஒரு தாயும், குழந்தையும் இருக்க கூடாது என்பதை உறுதி செய்வது எனது பொறுப்பு. கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு தேவை. அவர்களுக்கு வழங்கப்படும் லட்டுவில் புரதச் சத்து, நெய், வைட்டமின்கள் உள்ளன. அதை மாதம் முழுவதும் சாப்பிட முடியும்.
அனைத்து திட்டங்களையும் அமல்படுத்துவது அவசியமானது. இதன் பயன்கள் மற்றும் பயனாளிகள் ஊட்டசத்து இல்லாமல் பலவீனமாக இருந்தால், திட்டங்களால் பயன் இல்லை.
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா பேசினார்.
கருத்துகள்