நிதி அமைச்சகம் தமிழகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
சென்னையில் உள்ள 2 தனியார் சிண்டிகேட் நிதி குழுமங்களில் வருமான வரித்துறையினர் 23.09.2021 அன்று சோதனை நடத்தினர். சென்னையில் 35 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள பெரு நிறுவனங்கள் மற்றும் வர்த்தகங்களுக்கு கடனாக கணிசமான தொகையை ரொக்கமாக இந்த நிதி நிறுவனங்களும், அவற்றுடன் தொடர்புடைய அமைப்புகளும் வழங்கியிருப்பதற்கான ஆதாரங்கள் சோதனையின்போது கண்டறியப்பட்டன. மேலும், இந்த நிறுவனங்கள் அதிக வட்டியை வசூலிப்பதும், அவற்றின் ஒரு பகுதிக்கு வரி செலுத்தப்படாததும் தெரியவந்தது. கடன் பெறுபவர்கள் செலுத்தும் பெரும்பாலான வட்டி தொகைகள் போலியான வங்கி கணக்குகளில் பெறப்படுவதும், வரி நடைமுறைகளில் இந்த கணக்குகள் வெளியிடப்படாததும் சோதனையில் தெரியவந்தது. மேலும், கணக்கில் கொண்டு வரப்படாத தொகைகள், பாதுகாப்பற்ற கடன்களாக கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தவிர, இந்தக் குழுமத்தின் நபர்கள், கணக்கில் காட்டப்படாத சொத்து முதலீடுகள் மற்றும் இதர வருமானங்களைப் பெற்றிருப்பதற்கான ஆதாரங்களும் கண்டறியப்பட்டன.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ. 300 கோடிக்கும் அதிகமான கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டறியப்பட்டுள்ளது. கணக்கில் வராத ரூ. 9 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது
மேலும் நிதி அமைச்சகம் வழங்கும் தகவலில்
குஜராத்தில் வருமான வரித்துறை தேடுதல் நடவடிக்கை
வரி ஏய்ப்பு பற்றிய உளவுத் தகவலின் அடிப்படையில், குஜராத்தை சேர்ந்த ஒரு முன்னணி வைர உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் தொடர்புடைய இடங்களில் 2021 செப்டம்பர் 22 அன்று தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை வருமான வரித்துறை மேற்கொண்டது.
வைர வியாபாரம் தவிர, டைல்ஸ் தயாரிக்கும் தொழிலிலும் இந்த குழுமம் ஈடுபட்டுள்ளது. குஜராத்தில் உள்ள சூரத், நவசாரி, மோர்பி, வான்கனேர் மற்றும் மகாராஷ்டிராவில் மும்பையில் அமைந்துள்ள 23 வளாகங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய பணியாளர்களின் பாதுகாப்பில் சூரத், நவசாரி மற்றும் மும்பையில் ரகசிய இடங்களில் இருந்த கடந்த ஐந்து வருடங்களுக்கான கணக்கில் வராத பரிவர்த்தனைகள் மற்றும் தகவல்கள் குறித்த ஆதாரங்கள் காகிதம் மற்றும் டிஜிட்டல் வடிவில் அதிகளவில் கைப்பற்றப்பட்டன.
மேற்கண்ட காலகட்டத்தில் ரூ 518 கோடி மதிப்பிலான சிறிய பாலிஷ் செய்யப்பட்ட வைரங்களை கணக்கில் வராமல் வாங்கி விற்றது ஆரம்ப கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ரூ 95 கோடி மதிப்பிலான வைர கழிவுகளை கணக்கில் வராமல் விற்றதும் தெரியவந்துள்ளது.
ரூ 2,742 கோடி மதிப்பிலான சிறு வைரங்களை மேற்கண்ட காலகட்டத்தில் விற்றதாக கணக்கில் காட்டப்பட்டுள்ள நிலையில், இதில் குறிப்பிட்ட அளவு பணமாக கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான ரசீதுகள் முறையாக இல்லை.
கணக்கில் வராத ரூ 1.95 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் தேடுதல் நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரூ 10.98 கோடி மதிப்பிலான 8900 கேரட் கணக்கில் காட்டப்படாத வைர சரக்கும் கண்டறியப்பட்டுள்ளது. குழுமத்தின் பாதுகாப்பு பெட்டகங்களும் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன. விரைவில் அவை திறக்கப்படும்.
தேடுதல் நடவடிக்கையும் விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கருத்துகள்