ஐந்தாண்டுகளுக்கு ரூ 1,600 கோடியில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்
இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் என்ற மத்தியத் துறைத் திட்டத்தை ரூ 1,600 கோடி மதிப்பீட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு தேசிய அளவில் செயல்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக தேசிய சுகாதார ஆணையம் இருக்கும்.
சுகாதாரச் சேவைகள் சூழலியலில் டிஜிட்டல் சுகாதாரத் தீர்வுகள் மகத்தான பலனைத் தருகின்றன. கோவின், ஆரோக்கிய சேது மற்றும் இ-சஞ்சீவனி ஆகிய செயலிகள் சுகாதாரச் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதில் தொழில்நுட்பம் வகிக்கக்கூடிய பங்கை நிரூபித்துள்ளன. இருப்பினும், தொடர்ச்சியான கவனிப்பு மற்றும் வளங்களைத் திறம்படப் பயன்படுத்துவதற்கு இத்தகைய தீர்வுகளை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் உள்ளது.
ஜன்தன், ஆதார் மற்றும் கைபேசி ஆகிய மூன்றின் மீதும் மற்றும் அரசின் பிற டிஜிட்டல் முயற்சிகள் வடிவிலும் அமைக்கப்பட்ட அடித்தளங்களின் அடிப்படையில், பரந்த அளவிலான வசதிகளை வழங்குவதன் மூலம் தடையற்ற ஆன்லைன் சேவை தளத்தை ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் உருவாக்குகிறது.
தரவு, தகவல் மற்றும் உள்கட்டமைப்புச் சேவைகள், ஆரோக்கியம் தொடர்பான தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு, ரகசியத்தன்மை மற்றும் தனியுரிமை ஆகியவற்றை உறுதி செய்து, வெளிப்படையான, செயல்திறன் மிக்க டிஜிட்டல் சேவைகளை இதன் மூலம் வழங்க முடியும்.
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத் திட்டத்தின் கீழ், தங்கள் ஆபா (ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட்) எண்களை மக்கள் உருவாக்கிக் கொள்ள முடியும். அவர்களின் டிஜிட்டல் சுகாதாரப் பதிவுகளை அதனுடன் இணைக்கவும் முடியும். சுகாதாரச் சேவை வழங்குநர்களால் மருத்துவ அடிப்படை முடிவுகள் எடுக்கும் திறனை மேம்படுத்துவதற்கும் இது உதவும். தொலைமருத்துவம் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலமும், சுகாதாரச் சேவைகளை நாடு முழுவதும் எளிதில் பெரும் வசதியைச் செயல்படுத்துவதன் மூலமும் தரமான சுகாதாரப் பாதுகாப்பிற்கான சமமான அணுகலை இந்தப் பணி மேம்படுத்தும்
கருத்துகள்