மனிதகுலம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதி அனைவரின் நலனுக்காகவும் பாடுபடும் ஒற்றை நம்பிக்கை மட்டுமே நிலவுகிறது; குடியரசு தலைவர்
பல்வேறு மத பாரம்பரியங்கள் மற்றும் நடைமுறைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளன, ஆனால் மனிதகுலம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதி அனைவரின் நலனுக்காகவும் பாடுபடும் ஒற்றை நம்பிக்கை மட்டுமே நிலவுகிறது; குடியரசு தலைவர் கோவிந்த்.
பல்வேறு மத பாரம்பரியங்கள் மற்றும் நடைமுறைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளன, ஆனால் மனிதகுலம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதி அனைவரின் நலனுக்காகவும் பாடுபடும் ஒற்றை நம்பிக்கை மட்டுமே நிலவுகிறது என்று குடியரசு தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். ஒடிசா மாநிலம் பூரியில், கவுடிய மதத்தை நிறுவிய ஶ்ரீமத் பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபுபாத்-ன் 150-வது பிறந்த நாளின் மூன்றாண்டு காலக் கொண்டாட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
கடவுள் பல்வேறு வடிவங்களில் வழிபடப்படுகிறார். ஆனால், பக்தி பாவத்தோடு கடவுளை வழிபடும் பாரம்பரியத்துக்கு இந்தியாவில் முக்கியத்துவம் உண்டு. இங்கு, பல பெரும் துறவிகள் தன்னலமற்ற வழிபாட்டை நடத்தி வந்துள்ளனர். அத்தகைய பெரும் துறவிகளிலும், ஶ்ரீ சைதன்ய மகாபிரபுவுக்கு என ஒரு தனி இடம் உண்டு. அவரது அசாதாரணமான பக்தியால் ஈர்க்கப்பட்டு, ஏராளமான மக்கள் பக்தி மார்க்கத்தை தேர்ந்தெடுத்துள்ளதாக குடியரசு தலைவர் கூறினார்.
மக்கள் தங்களைப் புல்லை விட சிறிதாக கருதிக் கடவுளை மிகவும் பணிவுடன் வழிபட வேண்டும் என்று ஶ்ரீசைதன்ய மகாபிரபு அடிக்கடி கூறியதை குடியரசு தலைவர் நினைவு கூர்ந்தார். மரத்தை விட அதிக சகிப்புத் தன்மையுடனும், தற்பெருமையைக்கைவிட்டு, மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பவர்களாக மனிதர்கள் இருக்க வேண்டும் என்று ஶ்ரீசைதன்ய மகாபிரபு விரும்பினார் என்றும், கடவுள் மீது அசைக்க முடியாத பக்தியும், இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்துடன், அனைவரையும் சமத்துவம் என்னும் நூலால் இணைக்கும் முயற்சியும் கொண்டிருந்தார் என்றும் குடியரசு தலைவர் கூறினார்.
பக்தி மார்க்கத்தில் ஈடுபட்ட துறவிகள் தங்கள் காலங்களில் நிலவிய மத, சாதி,பாலினம் உள்ளிட்ட பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்களாகத் திகழ்ந்தனர். அதனால்தான் எல்லா வகுப்பையும் சேர்ந்த மக்கள் அவர்களது பாதையில் பயணித்தனர். குருநானக் தேவ் பக்தி மார்க்கத்ததில் ஈடுப்பட்டவாறே, அத்தகைய சமத்துவமான சமுதாயத்தை கட்டமைக்க முயன்றார்.
கடவுள் மீது முழு ஈடுபாடு என்னும் பக்தி மார்க்க சிறப்பியல்பு, அன்றாட வாழ்விலும் காணப்படுவதுண்டு என்று குடியரசு தலைவர் தெரிவித்தார். தேவை உள்ளவர்களுக்கு சேவை செய்வது நமது கலாச்சாரத்தில் உயர் முன்னுரிமையாகக் கருதப்படுகிறது. கொவிட் பெருந்தொற்று காலத்தில், நமது மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் இத்தகைய சேவையை வெளிப்படுத்தினர். அவர்களில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதிலும், தங்களது தைரியத்தை இழக்காமல், மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் ஈடுபட்டனர். கொரோனா வீர்ர்கள் பலர் தங்கள் உயிரைத் துறந்தாலும், அவர்களது சகாக்கள் அர்ப்பணிப்பு உணர்வைக் கைவிடாமல் மக்களது உயிர்களைப் பாதுகாத்தனர். அத்தகையவர்களுக்கு நாடு பெரும் நன்றிக்கடன் பட்டுள்ளது.
ஶ்ரீசைதன்ய மகாபிரபு தவிர பக்தி மார்க்கத்தில் ஈடுபட்ட மேலும் பலரும் நமது பன்முக கலாச்சாரத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தியுள்ளதாக குடியரசு தலைவர் கூறினார். பக்தி மார்க்க துறவிகள் மற்றவர்களுடன் முரண்பட்டதில்லை. மற்றவர்களின் போதனைகளுக்கு மதிப்பளித்தனர். 1893-ல் சிகாகோவில் உலக சமுதாயத்தினருக்கு இந்தியாவின் ஆன்மீகச் செய்தியை தெரிவித்தபோது சுவாமி விவேகானந்தர், பல்வேறு இடங்களில் உற்பத்தியாகும் ஆறுகள் கடைசியில் கடலில் கலப்பதைப்போல, மனிதர்களும் பல்வேறு பாதைகளை தேர்வு செய்துள்ளனர். இந்தப்பாதைகள் வேறுபட்டதாக தோன்றலாம், ஆனால் கடைசியில் அவை அனைத்தும் கடவுளையே அடைகின்றன என்று கூறினார். இந்தியாவின் இந்த ஆன்மீக ஒற்றுமையை ராமகிருஷ்ண பரமஹம்சரும், சுவாமி விவேகானந்தரும் போதித்தனர். இதை தேசப்பிதா மகாத்மா காந்தியும் பின்பற்றினார்.
மனிதகுலத்தின் நலனை முக்கிய நோக்கமாக கொண்ட கவுடிய மிஷன், ஶ்ரீசைதன்ய மகாபிரபுவின் போதனைகளை உலகுக்கு பரப்பும் தீர்மானத்தில் வெற்றியடையும் என, குடியரசுத் தலைவர் நம்பிக்கை வெளியிட்டார்
கருத்துகள்