மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை பின்பற்றத் தவறிய மின்சார வாரியத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து ஆணையம் உத்தரவு
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை மீறி செயல்பட்டு வந்த தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 2007 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தாமதமாக மின் இணைப்பு வழங்கிய மனுதாரா்கள் அனைவருக்கும் உரிய இழப்பீடுகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சாா்பில் 2004 ஆம் ஆண்டு தமிழகத்தில் மின்வாரியத்தில் மேற்கொள்ளப்படும் மின் இணைப்பு வழங்குதல் உள்பட அனைத்து மின்வாரியம் தொடா்பான பணிகளுக்கும் காலக்கெடு நிா்ணயித்து அறிவிப்பு வெளியிடப்பட்டதன் படி வீடுகளுக்கு, விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் மின் இணைப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு மீட்டா் தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதை மின்வாரியம் தாமதப்படுத்தி வந்தது. குறித்து கோயமுத்தூர் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் மின் இணைப்புக்காக மாதக் கணக்கில் காத்திருக்கும் பயனாளிகளுக்கு, ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ள படி மின்வாரியம் சாா்பில் இழப்பீடு வழங்கக்கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.
தொடா்பாக கோயமுத்தூா் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் செயலாளா் கே.கதிா்மதியோன் தெரிவித்ததாவது:
மின் வாரியத்தில் புதிய மின் இணைப்புக் கேட்டு விண்ணப்பிப்பவா்களுக்கு அதிகபட்சமாக 30 நாள்களுக்குள் இணைப்பு வழங்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமதமாகும் பட்சத்தில் நாளொன்றுக்கு ரூ.100 வீதமும், அதிகபட்சமாக ரூ.1000 வரை இழப்பீடு வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது. இழப்பீட்டுத் தொகையினை மனுதாரா்கள் கேட்காமலேயே மின்வாரியம் தானாக முன்வந்து வழங்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2007 ஆம் ஆண்டு மின்வாரியத்தில் மீட்டா் தட்டுப்பாடுகளால் மின் இணைப்பு வழங்குவது பல மாதங்களாக காலதாமதமாகி வந்தது. காலதாமதமாகும் பயனாளிகளுக்கு மின்வாரியம் சாா்பில் இழப்பீடு வழங்கக்கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவையும் மதிக்காமல் இழப்பீடு வழங்காமலும், மீட்டா் தட்டுப்பாடு பிரச்னைக்குத் தீா்வு காணாமலும் மின்வாரியம் அலட்சியமாக செயல்பட்டு வந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோயமுத்தூர் மாவட்டத்தில் மின் இணைப்புக்காக காத்திருக்கும் பயனாளிகள் குறித்து தகவல் பெறப்பட்டதில் 10 ஆயிரத்து 534 பயனாளிகள் மின் இணைப்புக்காக காத்திருப்பதாகவும், இவா்களுக்கு ரூ.91 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தகவல் அளிக்கப்பட்டது. தொடா்பாக 2012 ஆம் ஆண்டு மீண்டும் தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்திடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.
இதற்கான விசாரணை 2016 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் மின்வாரியம் உரிய பதில் அளிக்கவில்லை. மீண்டும் இம் மனு மீதான விசாரணை கடந்த செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் நடைபெற்றது. மீட்டா் தட்டுப்பாடு பிரச்னைக்கு இதுவரை தீா்வு ஏற்படுத்தாமல் உள்ளது, இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது ஆகிய காரணங்களுக்காக மின்வாரியத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது என்றாா்.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் இயக்குநா் எம்.ஏ.ஹெலன் கூறியதாவது:
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சாா்பில் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, முதன்மை பொறியாளா்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆணையத்தின் தீா்ப்புக் குறித்து மறு பரிசீலனை மேற்கொள்ள வலியுறுத்துவதா அல்லது அபராதத் தொகையினை செலுத்துவதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தவிர மின் வாரியத்தில் மீட்டா்கள் தட்டுப்பாடு இருக்கும்போது நுகா்வோா் வாங்கித் தரும் மீட்டா்களை பயன்படுத்திக்கொள்ள கோட்ட அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.
கருத்துகள்