பாதுகாப்பான மற்றும் நம்பகமான இணையத்திற்கான நடைமுறைகள் மற்றும் சைபர் சம்பவங்களைப் புகாரளித்தல் தொடர்பான வழிகாட்டுதல்களை செர்ட்-இன் வெளியிட்டுள்ளது
தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் 70பி பிரிவின் விதிகளின்படி, நாட்டில் இணையப் பாதுகாப்புத் துறையில் பல்வேறு செயல்பாடுகளுக்கான தேசிய நிறுவனமாக இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (செர்ட்-இன்) செயல்படுகிறது. இணைய அச்சுறுத்தல்களை செர்ட்-இன் தொடர்ந்து ஆய்வு செய்வதோடு, புகாரளிக்கப்படும் சைபர் சம்பவங்களைக் கண்காணிக்கிறது.நிறுவனங்கள் மற்றும் பயனர்களுக்கு அவர்களின் தரவு/தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப உள்கட்டமைப்பைப் பாதுகாக்க உதவும் ஆலோசனைகளை செர்ட்-இன் தொடர்ந்து வழங்குகிறது. இணையம் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் சம்பவங்கள் தொடர்பான அவசர நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக, சேவை வழங்குநர்கள், இடைத்தரகர்கள், தரவு மையங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து தகவல்களை செர்ட்-இன் பெறுகிறது.
சைபர் சம்பவங்கள் மற்றும் தொடர்புடைய நிகழ்வுகளை கையாளும் போது, இடையூறு விளைவிக்கும் சில இடைவெளிகளை செர்ட்-இன் கண்டறிந்துள்ளது. அடையாளம் காணப்பட்ட இடைவெளிகள் மற்றும் சிக்கல்களை நிவர்த்தி செய்ய, தகவல் பாதுகாப்பு நடைமுறைகள், செயல்முறை, தடுப்பு, பதில் நடவடிக்கை மற்றும் சைபர் சம்பவங்களைப் புகாரளித்தல் தொடர்பான வழிகாட்டுதல்களை தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் 70பி பிரிவின் துணைப்பிரிவு (6)-ன் விதிகளின் கீழ் செர்ட்-இன் வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் 60 நாட்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும்.
சைபர் சம்பவங்களை செர்ட்-இன்-க்கு கட்டாயமாகப் புகாரளிக்க வேண்டும்; தகவல் தொடர்பு தொழில்நுட்ப அமைப்புகளின் பதிவுகளை பராமரித்தல்; தரவு மையங்கள், விர்ச்சுவல் பிரைவேட் சர்வர் (விபிஎஸ்) வழங்குநர்கள், விபிஎன் சேவை வழங்குநர்கள், கிளவுட் சேவை வழங்குநர்கள் மூலம் சந்தாதாரர்/வாடிக்கையாளர் பதிவு விவரங்கள்; மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர்கள், மெய்நிகர் சொத்து பரிமாற்ற வழங்குநர்கள் மற்றும் பாதுகாவலர் கோப்பு வழங்குநர்களின் கேஒய்சி விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் இவற்றில் அடங்கும்.
ஒட்டுமொத்த இணையப் பாதுகாப்பு நிலையை இந்த வழிகாட்டுதல்கள் மேம்படுத்துவதோடு, நாட்டில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இணையத்தை உறுதி செய்யும்.
செர்ட்-இன் வெளியிட்டுள்ள வழிமுறைகளை https://www.cert-in.org.in/Directions70B.jsp எனும் முகவரியில் காணலாம்.
கருத்துகள்