கோதுமை கொள்முதல் பருவத்தை மே 31 வரை நீட்டித்துள்ள மத்திய அரசு,
கொள்முதலை தொடருமாறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் இந்திய உணவுக் கழகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது
கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மே 31-ந்தேதி வரை , கொள்முதலைத் தொடருமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட காலம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொள்முதல் செயல்முறையைத் தொடருமாறு மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்கள் விடுத்த கோரிக்கைகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மத்தியப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், குஜராத், பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், 2022-23 ரபி சந்தை பருவத்தில், மத்திய தொகுப்பின் கீழ் கோதுமை கொள்முதல் சீராக நடந்து வருகிறது.
முந்தைய பருவத்துடன் ஒப்பிடுகையில், மத்திய தொகுப்பின் கீழ் கோதுமை கொள்முதல் குறைவாக உள்ளது. முக்கியமாக குறைந்தபட்ச ஆதரவு விலையை விட அதிக சந்தை விலைக்கு விவசாயிகள் தனியார் வணிகர்களுக்கு கோதுமையை விற்று வருகின்றனர். கோதுமையின் உயர் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் கோதுமை ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மே 13ஆம் தேதி முடிவு செய்தது.
14.05.2022 வரை, 180 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் சுமார் 16.83 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அவர்கள் பெற்ற குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.36,208 கோடியாகும். இந்த நிலையில் உக்ரைனிலிருந்து கோதுமை இறக்குமதி செய்யும் நாடுகள் இந்தியாவிடமிருந்து கோதுமை வாங்க முன்வந்துள்ளதனால் ஏப்ரலில் அதிகபட்ச அளவுக்கு கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதன் விளைவாக உள்நாட்டில் கோதுமை விலை அதிகரித்ததைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது.
கோதுமை ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் இந்திய வர்த்தகக் குழு மொராக்கோ, டுனீசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், துருக்கி, அல்ஜீரியா, லெபனான் உள்ளிட்ட நாடுகளுக்கு வர்த்தகக் குழுவை அனுப்பியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் (2022-23) 1 கோடி டன் அளவுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அரசு தடை விதித்துள்ளது. தற்போது சர்வதேச அளவில் கோதுமை விலை உயர்வையடுத்து இந்தியாவின் ஒட்டுமொத்த உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், அண்டை நாடுகள், அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் அதிக விலைக்கு வாங்குவதால் விவசாயிகள் அரசு கொள்முதலுக்கு கோதுமை தருவதை குறைத்துள்ளனர்.
உள்நாட்டில் தொடர் விலை ஏற்றத்தை தவிர்க்க கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது. கோதுமையை வாங்கும் தனியார், அதிகளவில் ஏற்றுமதி செய்தால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படலாம் என கருதி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷியா நாடுகளில் இருந்து கோதுமை ஏற்றுமதி தடைப்பட்டுள்ளதால் உலக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.விலை உயர்ந்து வருவதால் எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் கோதுமை விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் கோதுமை விலை உயர்ந்து வருவதால் பதுக்கல் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் கோதுமை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகளை விதிக்கவும் மத்திய அரசு பரிசீலனை செய்துள்ளது. ராஜஸ்தானின் உதய்பூரில் சிந்தனை அமர்வு கூட்டத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்
செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசியவர், "நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு பொருளாதாரக் கொள்கைகளில் உடனடி மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை ஒரளவு உயர்த்த முடியும்.கோதுமை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்திருப்பது விவசாயிகளுக்கு எதிரானது, இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக இருப்பதாகவும், கொரோனாவுக்கு பின் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மெதுவாக உள்ளது". என்று கூறினார்.
கருத்துகள்