குடியரசு துணைத்தலைவர் மூன்று நாடுகள் பயணமாக கபோன், செனகல் மற்றும் கத்தார் புறப்பட்டுச்சென்றார்
குடியரசு துணைத்தலைவர் எம் வெங்கையா நாயுடு, கபோன், செனகல் மற்றும் கத்தார் ஆகிய மூன்று நாடுகளில் 30 மே முதல் 7 ஜூன் 2022 வரை பயணம் மேற்கொள்கிறார். புதுதில்லியில் இருந்து இன்று புறப்பட்டுச் சென்ற அவருடன், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு சுஷில்குமார் மோடி (மாநிலங்களவை), திரு விஜய் பால் சிங் தோமர் (மாநிலங்களவை) மற்றும் திரு பி ரவீந்திரநாத் (மக்களவை) ஆகியோர் அடங்கிய உயர்மட்டக்குழுவும் சென்றுள்ளது. இந்தப் பயணத்தின் போது மூன்று நாடுகளுடனும், பல்வேறு இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரு நாயுடுவின் இந்தப்பயணம், இந்த மூன்று நாடுகளிலும் இந்திய குடியரசுத் துணைத்தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் முதலாவது பயணம் என்பதோடு, கபோன் மற்றும் செனகல் நாட்டிற்கு இந்திய உயர்மட்ட தூதுக்குழு செல்வதும் இதுவே முதல்முறையாகும். மேலும் இந்தப் பயணம் ஆப்பிரிக்க நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்து செல்வதுடன், ஆப்பிரிக்க கண்டத்துக்கு இந்தியா அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதாகவும் அமையும்.
இந்தியா-கத்தார் இடையே தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டதன் 50-வது ஆண்டு நிறைவை கொண்டாட இருநாடுகளும் ஆயத்தமாகி வரும் வேளையில், குடியரசுத் துணைத்தலைவரின் கத்தார் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அத்துடன் இருதரப்பு ஒத்துழைப்புகளுக்கு இந்தப்பயணம் மேலும் உத்வேகம் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கபோனில் 30 மே தொடங்கி, 1 ஜூன் 2022 வரை பயணம் மேற்கொள்ளும் திரு நாயுடு, அங்கு அந்நாட்டு பிரதமர், திருமதி ரோஸ் கிறிஸ்டியானே ஒசோகா ரபோன்டாவுடன் இருநாட்டு குழுக்கள் அளவில் பேச்சு வார்த்தை நடத்துவதுடன், கபோன் அதிபர் திரு அலி போங்கோ ஒன்டிம்பா உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து பேசவுள்ளார். மேலும் கபோன் நாட்டின் தொழில்துறையினருடன் கலந்துரையாடும் அவர், இந்திய வம்சாவளியினரிடையேயும் உரையாற்றவுள்ளார்.
ஜூன் 1 முதல் 3 வரை செனகல் செல்லும் திரு நாயுடு, அந்நாட்டு அதிபர் திரு மெக்கி சால் உடன் இருநாட்டு குழுக்கள் அளவில் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், செனகல் தேசிய சட்டப்பேரவையின் சபாநாயகர் திரு முஸ்தபா நியாசேவையும் சந்திக்கவுள்ளார். இந்தியாவும், செனகலும் தங்களிடையே தூதரக உறவு ஏற்பட்டதன் 60-வது ஆண்டு நிறைவை கொண்டாடி வருகின்றன.
தமது பயணத்தின் நிறைவாக ஜூன் 4 முதல் 7-ந் தேதி வரை கத்தார் செல்லும் திரு நாயுடு, அந்நாட்டின் துணை அமீர், திரு ஷேக் அப்துல்லா பின் ஹமத் அல் தானியுடன் குழுக்கள் அளவிலும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பயணத்தின் நிறைவு நாளான்று, கத்தாரில் உள்ள இந்திய சமுதாயத்தினரின், சமுதாய வரவேற்பு நிகழ்ச்சியிலும், அவர் பங்கேற்கவுள்ளார்.
கருத்துகள்