சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை செயலாளரும், மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசனிடம், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலர் ஆர்.தர்மர் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் கட்சியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
தி.மு.க சார்பாக கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் ஏற்கனவே முதலமைச்சர் முன்னிலையில் வேட்பு மனுதாக்கல் செய்த நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேட்பு மனுவை சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியும், சட்டப்பேரவையின் செயலாளருமான சீனிவாசனிடம் தாக்கல் செய்த போது
அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் உடனிருந்தனர். அதற்கு முன்னர் காங்கிரஸ் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
அதிமுக சார்பாக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோரும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
மாநிலங்களை தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் நிறைவுபெறுவதைத்தொடர்ந்து வேட்புமனு பரிசிலீனை ஜூன் மாதம் 1 ஆம் தேதியும், மனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் 3 ஆம் தேதி வரை உள்ளது.
மாநிலங்களவைத் தேர்தலில் உறுப்பினர் இடங்களுக்குப் போட்டியிடுபவர்கள் வேட்புமனுவில் சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் முன் மொழிந்திருக்க வேண்டும். அவ்வாறு உறுப்பினர்கள் முன்மொழியாமல் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் பரிசிலீனையில் நிராகரிக்கப்படும். இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரபூர்வமாக திமுக, காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்களை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக பரிசீலனை முடிந்து அறிவிப்பார்.
கருத்துகள்