தேர்தல் ஆணையம் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 2022 (16 ஆவது குடியரசு துணைத் தலைவர் தேர்தல்)
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி இந்தியாவின் குடியரசு துணைத் தலைவராக இருக்கும் திரு வெங்கய்யா நாயுடு அவர்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் 68 ஆவது பிரிவில், இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்காலம் நிறைவுறுவதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளது.
இதற்காக, தேர்தல் ஆணையம் இன்று அதன் தலைவர் ராஜீவ் குமார் தலைமையில் கூடி, ஆலோசனை நடத்தியது. சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் இந்த தேர்தலை நடத்தி முடிப்பதற்கான பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. அரசியல் சாசன கடமையை நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது.
16 ஆவது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் அட்டவணையை வெளியிடுவதில் இந்திய தேர்தல் ஆணையம் பெருமிதம் கொள்கிறது என்று அந்த நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்கள் சட்டம் 1952 ன் படி, குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கையை அவரது பதவிக்காலம் முடிவதற்கு 60 நாட்களுக்கு முன்பாக வெளியிடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய அரசியல் சாசனத்தின் 66 ஆவது பிரிவின் படி, குடியரசு துணைத் தலைவர் நாடாளுமன்றத்தின் இருஅவைகளின் உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுகிறார். தற்போதைய 16 ஆவது குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 233 மாநிலங்களவை உறுப்பினர்களும், 12 மாநிலங்களவை நியமன உறுப்பினர்களும், 543 மக்களவை உறுப்பினர்களும் வாக்களிக்க உள்ளனர். ஒட்டுமொத்தமாக நாடாளுமன்றத்தின் 788 உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கிறார்கள்.
இந்த தேர்தலுக்கான அறிவிக்கை ஜூலை 5 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. ஜூலை 19 ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதிநாள். 20 ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 22 ஆம் தேதி வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான இறுதிநாள்.
ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி சனிக்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெறும். அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இப்படி வாக்குப்பதிவு நடத்தப்பட்டால் அதன் எண்ணிக்கையும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதியே நடைபெறும்.
கருத்துகள்