புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
2022 ஜூன் 29 இன்று புள்ளியியல் தினம் 2022 கொண்டாடப்படவுள்ளது
பொருளாதார திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறைக்கு மறைந்த பேராசிரியர் பிரசந்த சந்திர மகாலனோபிஸ் வழங்கிய மதிப்புமிகு பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவரது பிறந்த நாளான ஜூன் 29 ஒவ்வொரு ஆண்டும் புள்ளியியல் தினமாக மத்திய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் சமூக-பொருளாதார திட்டமிடல், வளர்ச்சிக்கான கொள்கை வகுத்தல் ஆகியவற்றில் புள்ளியியலின் பங்களிப்பும், முக்கியத்துவமும் குறித்து பொதுமக்களிடையே குறிப்பாக இளம் தலைமுறையினர் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது புள்ளியியல் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மையப்பொருளில் இந்த விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு ‘நீடித்த வளர்ச்சிக்கான தரவுகள்’ என்பது மையப்பொருளாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நேரடியாகவும், இணையதளம் வழியாகவும் புள்ளியியல் நடத்தப்படுகிறது. இதில் புள்ளியியல் மற்றும் திட்டஅமலாக்க அமைச்சக இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) பெருநிறுவனங்கள் அமைச்சக இணையமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் தலைமை விருந்தினராக கலந்துகொள்வார்.
தேசிய புள்ளியியல் ஆணைய தலைவர் பேராசிரியர் விமல் குமார் ராய், இந்திய தலைமை புள்ளியியலாளரும், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளருமான டாக்டர் ஜி பி சமந்தா, இந்திய புள்ளியியல் கல்வி கழகத்தின் இயக்குனர் பேராசிரியர் சங்கமித்ரா பண்டோபாத்யாய் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுவார்கள்.
2022-க்கான அதிகாரப்பூர்வ புள்ளியியல் துறையில் பேராசிரியர் பி சி மகாலனோபிஸ் தேசிய விருது, புள்ளியியல் துறையில் வாழ்நாள் பங்களிப்பு செய்தவர்களுக்கான பேராசிரியர் பி வி சுகத்மே தேசிய விருது ஆகியவை இந்த நிகழ்வில் அறிவிக்கப்படும். இந்த ஆண்டுக்கான மையப்பொருள் குறித்து நிகழ்விடத்திலேயே கட்டுரை போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவோரும் நிகழ்வில் பாராட்டப்படுவார்கள்.
கருத்துகள்