வெப்பநிலையால் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்ய அதிகளவில் நிலக்கரியை உற்பத்தி செய்ய நடவடிக்கை - மத்திய அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீடித்து வரும் அதிக வெப்பநிலையால் அதிகரித்து வரும் மின் தேவையை கருத்தில் கொண்டு, அதிகளவில் நிலக்கரியை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி கூறினார்.
என்எல்சி இண்டியா லிமிடெட் நிறுவனத்தில் (நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்) சுரங்கப் பணிகளை ஆய்வு செய்த பின்னர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகரித்து வரும் மின் தேவையால் நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று தெரிவித்தார்.
பிரதமரின் உஜாலா திட்டத்தின் கீழ் மக்களுக்கு இதுவரை 36.79 கோடி எல்இடி மின்விளக்குகள் விநியோகம் செய்யப்பட்டதன் விளைவாக மின்நுகர்வின் அளவு கணிசமாக குறைந்துள்ளது என்று கூறிய அமைச்சர், “எனினும் அதிக வெப்பநிலையால் கடந்த சில மாதங்களாக மின்நுகர்வு அதிகரித்து வருகிறது,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இதை சமாளிக்க ஏதுவாக, தடையற்ற மின் உற்பத்தியை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது,” என்று கூறினார்.
2040-ம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மின் உற்பத்தி, சுமார் 3000 பில்லியன் யூனிட்டுகளாக இருக்கும் அதே வேளையில், இந்தியாவின் எரிசக்தி தேவை இரண்டு மடங்காக இருக்கும் என்றார். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, 2040-க்குள், அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி தேவை, சுமார் 1500 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும் என்றும் கூறினார்.
நமது நிலையான சுரங்க இலக்குகளை மனதில் கொள்ள வேண்டிய நிலையில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது பற்றியும், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார். மேலும், நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரியைச் சார்ந்திருப்பதை, மரபுசாரா எரிசக்தி மூலங்களின் வளர்ச்சியுடன் சமநிலைப்படுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம் என்றும் கூறினார். எனினும், மரபுசாரா எரிசக்திக்கான நமது மாற்றம், பெரும்பாலும் படிப்படியாகத்தான் இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த 8 ஆண்டுகளில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின், மின் உற்பத்தித் திறன், 2740 மெகாவாட்டிலிருந்து 6061 மெகாவாட்டாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. மேலும், சுரங்கத்தின் திறன் ஆண்டிற்கு 30.60 மில்லியன் டன்னிலிருந்து (MTPA) 50.60 மில்லியன் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் என்எல்சிஐஎல், பழுப்பு நிலக்கரி சுரங்கம் மற்றும் பழுப்பு நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி என்பதிலிருந்து நிலக்கரி சுரங்கம் மற்றும் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி, மற்றும் மரபுசாரா மின் உற்பத்தி (அதாவது, சூரிய ஒளி, காற்றாலை மற்றும் கட்டிடங்களின் மேற்பகுதியில் அமைக்கப்பட்ட சூரிய ஒளி மூலம் மின்னுற்பத்தி உட்பட) என்கிற பல்வகை மேம்பட்ட நிலையை அடைந்தது. மேலும், சுரங்கம் மற்றும் மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கான ஆலோசனைகளை வழங்கும் நிறுவனமாகவும் பரிணமித்துள்ளது.
மேலும், என்எல்சிஐஎல், அதன் உற்பத்தித்த் திறனில் 45%-க்கும் மேலான, அனல் மின்சக்தி மற்றும் அதன் முழு மரபுசாரா மின்சக்தி உற்பத்தியை தமிழகத்திற்கு வழங்கி வருகிறது.
இந்தியாவில் 1-ஜிகாவாட் திறனுடைய, சூரிய மின் நிலையத்தை நிறுவிய முதல் மத்திய பொதுத்துறை நிறுவனம், என்கிற பெருமையை, என்எல்சி இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.
உலகளாவிய பெருந்தொற்றுநோயிலிருந்து நாடு மீண்டிருந்தாலும், கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவதில் என்எல்சி இந்தியா நிறுவனம் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்கை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி பாராட்டினார்
கருத்துகள்