குடியரசு தலைவர் மாளிகையில் மேம்படுத்தப்பட்ட ஆயுஷ் நல்வாழ்வு மையத்தை குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் தொடங்கிவைத்தார்
புதுதில்லி குடியரசு தலைவர் மாளிகையில் மேம்படுத்தப்பட்ட ஆயுஷ் நல்வாழ்வு மையத்தை குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் தொடங்கிவைத்தார். இந்த தொடக்க நிகழ்ச்சியில் திருமதி சரிதா கோவிந்த் உடனிருந்தார். மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், இணையமைச்சர் திரு மூஞ்ச்பாரா மகேந்திரபாய் காலுபாய் மற்றும் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
குடியரசுத் தலைவர் செயலகமும், ஆயுஷ் அமைச்சகமும் இணைந்து 2015 ஜூலை 25 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆயுஷ் நல்வாழ்வு மையத்தை தொடங்கின. குடியரசுத் தலைவர், குடியரசுத் தலைவர் செயலக அதிகாரிகள், குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியிருப்போர் ஆகியோரின் மருத்துவ தேவைகளை நிறைவு செய்ய இந்த மையத்தில் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஓமியோபதி, இயற்கை வைத்தியம் ஆகிய சிகிச்சை வசதிகள் இடம்பெற்றுள்ளன.
குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள ஆயுஷ் நல்வாழ்வு மையம் “ நிறுவுதல், செயல்பாடு மற்றும் முக்கிய மைல்கல்” என்பது பற்றிய ஆவண நூல் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் வெளியிடப்பட்டது. இதனை ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு மூஞ்ச்பாரா மகேந்திரபாய் காலுபாய் வெளியிட்டார்.
இந்த நூல் குறித்து வாழ்த்துச் செய்தி வெளியிட்ட குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், இந்த நூலில் உள்ள பல தகவல்களால் இந்த மையத்தைச் சேர்ந்த ஏராளமான நோயாளிகள் பயனடைந்ததாக கூறப்பட்டிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார். நோயாளிகளுக்கான பயிலரங்குகள், பள்ளிக்கூடங்களில் சுகாதார நிகழ்ச்சி, புறநோயாளிகள் துறையின் மக்கள் தொடர்பு போன்ற இந்த மையத்தின் பணிகளையும் அவர் பாராட்டினார். கொவிட்-19 பெருந்தொற்றின் போது தொலைதூர மருத்துவ வசதிகள் தொடங்கப்பட்டதும், இணையவழி யோகா வகுப்புகளும், சிக்கலான காலகட்டத்தில், பயனாளிகளுக்கு உதவி செய்ததாக குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்