ஆந்திரப் பிரதேசத்தில் வங்கி ஊழியர் உதவியில் நூதனமாக மோசடி. பத்திரப் பதிவு செய்தவர்கள் கொடுத்த ஆதார், கைரேகையைப் பதிவிறக்கம் செய்து 149 நபர்களின் வங்கிக் கணக்கில் ரூபாய்.15 லட்சம் மோசடிக் கையாடல்; ஆந்திராவில் முன்னாள் ஊழியர் உள்ளிட்ட 7 பேர் மோசடிக் கைவரிசை
பத்திரப்பதிவு இணையதளத்திலிருந்து ஆதார், கைரேகைகளை பதிவிறக்கம் செய்து 149 நபர்களின் வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 15 லட்சம் மோசடி செய்த முன்னாள் பத்திரப்பதிவு ஊழியர் உள்ளிட்ட ஏழு பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரலு. கர்னூல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இயங்கிவரும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கணினி இயக்குவதற்கான நபராக சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒப்பந்த முறையில் பணிபுரிந்தார். பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், அவர் ஏபிஐஜிஆர்எஸ் எனப்படும் பத்திரப்பதிவு வெப்சைட்டில் சென்று பத்திரப்பதிவு செய்தவர்களின் புகைப்படம், ஆதார் மற்றும் கைரேகைகளை பட்டர் பேப்பர் எனப்படும் காகிதத்தில் தரவிறக்கம் செய்து சேகரித்து வந்தாராம்.
அதோடு கைரேகைகளை பதிவிறக்கம் செய்து ரப்பர் ஸ்டாம்ப் தயாரிக்கும் கடை ஒன்றில் கொடுத்து அதேபோன்ற ரேகைகளை ரப்பர் ஸ்டாம்பாக தயாரித்து சேகரித்துள்ளார். பின்னர், ரப்பர் ஸ்டாம்ப்பை ஏடிஎம் இயந்திரங்களில் ரேகை பதிவு செய்து மினி ஸ்டேட்மெண்ட் எடுத்துள்ளார். பின்னர், அதே வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடி வந்துள்ளார்.
இதேபோன்று ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தனது பத்திரங்களைப் பதிவு செய்த பின்னர், சில வாரங்களில் அவர்களின் வங்கி கணக்கிலிருந்து மர்மமான முறையில் தொடர்ந்து பணம் மாயமாகி வந்தது. தொடர்பாக அந்த நிறுவனத்தினர் ஹைதராபாத்தில் உள்ள சைப்ராபாத் குற்றப்பிரிவுக் காவல்துறையில் புகார் செய்தனர். அதனடிப்படையில் பிரகாசம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த வெங்கடேஸ்வரலுவை இரண்டு நாட்களுக்கு முன்பு பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தது. இதனிடையே, இந்தத் துணிகர மோசடியில் இவருடன் பலர் உடந்தையாக இருப்பார்கள் என்பதால் வெங்கடேஸ்வரலுவிடம் கடந்த இரண்டு நாட்களாக தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இது தொடர்பாக வெங்கடேஸ்வரலு மற்றும் அவரது கூட்டாளிகளாகச் செயல்பட்ட ஏழு நபர்களைங் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூபாய். 3.50 லட்சம் ரொக்கப் பணம், 125 சிம்கார்டுகள், 20 செல்போன்கள் மற்றும் கைரேகை பதிவு செய்வதற்காகத் தயாரிக்கப்பட்ட கருவிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
சைப்ராபாத் காவல்துறை ஆணையர் பொன்ரவீந்திரா செய்தியாளர் மத்தியில், தெரிவித்த தகவல்: "வெங்கடேஸ்வரலு மற்றும் அவரது கூட்டாளிகளிடமிருந்து மொத்தம் பத்தாயிரம் நபர்களின் கைரேகைகளின் பதிவுகளைப் பறிமுதல் செய்துள்ளோம். இவர்கள் 149 பேரின் வங்கிக் கணக்கிலிருந்து இதுவரை ரூபாய் 15 லட்சம் வரை எடுத்தது தெரியவந்துள்ளது. காலை முதல் பத்திரப்பதிவு செய்ய வருவோரின் ஆவணங்களைச் சேகரித்து குழுவாக இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருவதாகவும்" தெரிவித்தார்.
நாட்டிலேயே முதன்முறையாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் கொடுத்த ஆதார் மற்றும் கைரேகைகளைத் தரவிறக்கம் செய்து இதுபோன்ற மெகா மோசடி நடந்தியிருப்பது இதுவே முதல்முறை. சமீபத்தில், ஆதார் அட்டை வழங்கும் நிறுவனமான உதய் நிறுவனம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், பொதுமக்கள் தங்களின் ஆதார் அட்டை விவரங்களை எங்கும் வழங்க வேண்டாம். கடைசி நான்கு இலக்க எண்களை மட்டும் கொடுத்தால் போதும் எனக் கூறியிருந்தது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த உத்தரவை மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க அதேநாளில் உதய் நிறுவனம் திரும்பபெற்றது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்