நபார்டு வங்கியின் 41-வது நிறுவன தினக் கொண்டாட்டம்
தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு வங்கியின் 41-வது நிறுவன தினம் சென்னையில் கொண்டாடப்பட்டது. தமிழக நிதியமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு பழனிவேல் தியாகராஜன், நபார்டு வங்கி கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றிவரும் சேவைகளை பாராட்டியதுடன், அந்த வங்கி தமிழ்நாட்டிற்கு வழங்கிய பல்வேறு உதவிகள் மற்றும் செயல்பாடுகளையும் சுட்டிக்காட்டினார். நபார்டு நிதியுதவியுடன் கூடிய கிராமப்புற கட்டமைப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள், வங்கிகள், திட்ட அமலாக்க முகமைகள் மற்றும் அரசுத்துறைகளுக்கு விருதுகளையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது, காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் “நடமாடும் வங்கி”-யையும் அமைச்சர் தொடங்கிவைத்தார்.
மேலும், வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளின் அரங்குகளையும் திறந்துவைத்த அமைச்சர், இந்த அமைப்புகள் மூலம் கிடைக்கும் வருவாய் மற்றும் சேவைகள் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் நபார்டு வங்கியின் செயல்பாடுகளை விளக்கிய தலைமைப் பொது மேலாளர் திரு டி வெங்கடகிருஷ்ணா, தமிழ்நாட்டிற்கு நபார்டு வங்கி இந்த நிதியாண்டில் 32,443 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியிருப்பதாகக் கூறினார். கிராமப்புற கட்டமைப்பு திட்டங்களுக்காக மட்டும் ரூ.3,111 கோடி வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கியின் தலைமைப் பொது மேலாளர் திருமதி உமா சங்கர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு பார்த்தா பிரதீம் சென்குப்தா, இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு சாந்திலால் ஜெயின், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் வி.கீதா லஷ்மி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
கருத்துகள்