சென்னையில் மரம் நடும் இயக்கம், புகையிலை கட்டுப்பாட்டு விழிப்புணர்வு
75 ஆண்டு சுதந்திர கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை பெரம்பூரில் மரம் நடும் இயக்கம், புகையிலை கட்டுப்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகியவை இன்று நடைபெற்றன. தெற்கு ரயில்வேயின் ரயில்வே பாதுகாப்பு படை, மேரி அன்னி அறக்கட்டளை ஆகியவை இணைந்து மரம் நடும் இயக்கம், தூய்மை இயக்கம், புகையிலை கட்டுப்பாட்டு விழிப்புணர்வு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதில் பெரம்பூர் சாய் ஐடிஐ மாணவர்கள் கலந்து கொண்டனர். பெரம்பூர் ரயில்வே பாதுகாப்பு படை வளாகம், லோகோ பணிமனை வளாகம் ஆகியவற்றில் மரம் நடுதல் மற்றும் தூய்மை இயக்கமும், சாய் ஐடிஐ-யில் புகையிலை கட்டுப்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றன. பெரம்பூர் ஆர்பிஎப் போஸ்ட் கமாண்டர் திரு ஆல்பர்ட் தினகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் திரு சிரில் அலெக்சாண்டர், லோகோ பணிமனையின் தலைமை பணி மேலாளர் திரு விபுல் சிங், சாய் ஐடிஐயின் முதல்வர் திரு ராமச்சந்திரன் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்