குரங்கு அம்மை நோய் மேலாண்மைக்கான வழிகாட்டு நெறிமுறை
குரங்கு அம்மை நோய் பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன், அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பது வருமாறு:-
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, 1 ஜனவரி 2022 முதல் 22ஜூன் 2022 வரை, ஆய்வக பரிசோதனைகளுக்கு பிறகு, 50 நாடுகளைச் சேர்ந்த 3413 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகளையும் (86%) அமெரிக்காவையும் (11%) சேர்ந்தவர்களாவர். இது உலக அளவில் மெதுவாக, அதேவேளையில், நிலையாக தொற்று பரவி வருவதை எடுத்துக்காட்டுகிறது.
இந்த நோய் பாதிப்பு உலக அளவில் அதிகரித்து வருவது, இந்தியாவிலும் தேவையான ஆயத்த நிலையை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
எனவே, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் கீழ்க்காணும் நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்:
அ) மாநில எல்லைப்பகுதி நுழைவிடங்களில் உள்ள சுகாதார கண்காணிப்புக் குழுக்கள், , நோய் அறிகுறியுடன் உள்ளவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் கண்காணிப்பு குழுக்கள் மற்றும் மருத்துவர்கள், மாறுபட்ட நோய் கண்டறிதல், நோய் பாதிப்பு இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுபவர்கள்/ பாதிப்பு வாய்ப்பிருப்பவர்கள்/ பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரக்கும் பயிற்சி மற்றும் மறுபயிற்சி அளிப்பதுடன், பாதிப்பு கண்டறியப்பட்டால், தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல் மற்றும் தேவையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆ) மாநில நுழைவு இடங்களில் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் அனைவரையும் பரிசோதனை செய்யவேண்டும்.
இ) நோயாளிகளை தனிமைப்படுத்துதல், அல்சர் பாதிப்பிலிருந்து பாதுகாத்தல் மற்றும் அதுதொடர்பான சிகிச்சை அளிப்பதுடன், தொடர்ந்து கண்காணித்து உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் உயிரிழப்பை தடுக்க வேண்டும்.
ஈ) குறிப்பிட்ட சில சுகாதார மையங்களில் பணியாற்றும் சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் எளிமையான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதிப்பு பற்றிய தகவலை முறையாக தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும்.
உ) குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவோர்/ பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் சிகிச்சை பெற ஏதுவாக, குறிப்பிட்ட சில மருத்துவமனைகளை தேர்வு செய்து, அங்கு போதுமான மனித வளம் மற்றும் மருத்துவ சாதன கையிருப்பை உறுதி செய்ய வேண்டும்.
இது தவிர, ஸ்புட்னிக் வி (Sputnik v) தடுப்பூசியை இரண்டு டோஸ் செலுத்திக்கொண்டவர்கள், முன்னெச்சரிக்கை தவணையை (பூஸ்டர் டோஸ்) சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார் குரங்கு அம்மை வைரஸால் ஏற்பட்ட அரிய வகை தொற்று நோய் . குரங்கு அம்மை வைரஸ் Poxviridae குடும்பத்தின் Orthopoxvirus இனத்தைச் சேர்ந்த ஒரு இரட்டை இழை DNA வைரஸ். இரண்டு தனித் தனி மரபியல் பிரிவுகளில் முதலாவது பிரிவு மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும், இரண்டாவது பிரிவு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் கண்டறியப்பட்டதில் காங்கோ பகுதியில் கண்டறியப்பட்ட வைரஸே கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்தது. இந்த இரண்டு வைரஸ் பிரிவுகளும் இது வரை கேமரூன் நாட்டில் மட்டுமே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
குரங்கு அம்மை நோய் மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. இருப்பினும் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருள்களை உபயோகிப்பதன் மூலம் அது மற்றவர்களுக்குப் பரவலாம். கரோனாவைப் போன்று, இந்த நோயும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இருமல், தும்மலின் மூலமும் அது மற்றவர்களுக்குப் பரவும் ஆபத்து உள்ளது. காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் மற்றும் இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிகப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்பளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்தக் கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும்.உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சியின்படி, தரமற்ற மருத்துவச் சேவையைப் பெறும் 10 நபர்களில் ஒருவர் இந்த நோயால் இறக்கும் சாத்தியம் உள்ளது. இருப்பினும், முறையான சிகிச்சையை மேற்கொண்டால் இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு சில வாரங்களில் குணமடைந்துவிட முடியும் என ஆராய்ச்சி உணர்த்தும்.
கருத்துகள்