“பாடு, நடனமாடு, பிரார்த்தனை செய் - ஸ்ரீல பிரபுபாதாவின் உத்வேகம் தரும் கதை” என்ற புத்தகத்தை வெளியிட்ட குடியரசுத் துணைத் தலைவர்
ஒற்றுமை, அமைதி, சமூக நல்லிணக்கம் ஆகிய இந்திய நாகரிக விழுமியங்களை மேம்படுத்த, ஆன்மீக மறுமலர்ச்சி அவசியம் – குடியரசு துணைத்தலைவர்
ஒற்றுமை, அமைதி மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகிய உலகளாவிய விழுமியங்களை இந்திய நாகரிகம், நிலைநிறுத்துகிறது என்று குடியரசு துணைத்தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார். இந்தப் பழமையான மதிப்புகளைப் பாதுகாக்கவும் பரப்பவும் ஆன்மீக மறுமலர்ச்சி அவசியம் என அவர் கூறினார்.
குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , “பாடு, நடனமாடு, பிரார்த்தனை செய் - ஸ்ரீல பிரபுபாதாவின் உத்வேகம் தரும் கதை” என்ற புத்தகத்தை வெளியிட்ட பின்னர் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், சுவாமி பிரபுபாதா போன்ற சிறந்த துறவிகள் மற்றும் ஆன்மீக குருக்களிடமிருந்து உத்வேகம் பெறவும், அவர்களின் குணங்களை இளைஞர்கள் உள்வாங்கவும் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். சிறந்த மனிதர்களாக மாற ஒழுக்கம், கடின உழைப்பு, பொறுமை மற்றும் கருணை ஆகியவை முக்கியம் எனக்கூறிய அவர், "நீங்கள் எப்போதும் சாதி, பாலினம், மதம் மற்றும் பிராந்தியம் என்ற குறுகிய கருத்துக்களுக்கு அப்பால் உயர்ந்து சமுதாயத்தில் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் அமைதியைக் கொண்டுவர உழைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். இஸ்கான் நிறுவனர் ஸ்ரீல பிரபுபாதரின் இந்த வாழ்க்கை வரலாற்று நூலை டாக்டர் ஹிந்தோல் சென்குப்தா எழுதியுள்ளார்.
பகவத் கீதையின் போதனைகளை உலகம் முழுவதும் பிரபலப்படுத்திய ஸ்ரீல பிரபுபாதரைப் பாராட்டிய குடியரசுத் துணைத் தலைவர், அவரை நவீன யுகத்தில் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் சிறந்த தூதர்களில் ஒருவர் எனப்புகழ்ந்துரைத்தார். ஆன்மிகம் நமது மிகப் பெரிய பலம் என்று கூறிய அவர், பண்டைய காலங்களிலிருந்து ஆன்மீகமே நமது தேசத்தின் ஆன்மாவாகவும், நமது நாகரிகத்தின் அடித்தளமாகவும் உள்ளது என்றார். நமது பண்டைய வேதங்களின் ஆழ்நிலை ஆன்மிக மதிப்பைப் பாராட்டிய திரு நாயுடு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நெறிமுறைகள் மற்றும் விழுமியங்களின் அடிப்படையில் ஒரு லட்சிய வாழ்க்கையை நடத்த மக்களை வழிநடத்தும் கையேடுகளாக அவை உள்ளன என்று கூறினார். “நமது வேதமான பகவத் கீதை, மனித வாழ்வின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும், நுண்ணறிவுத் தீர்வுகளை வழங்குகிறது" என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியாவை பக்தி பூமி என்று கூறிய திரு நாயுடு, பக்தி என்பது இந்தியர்களின் நாடி, நரம்புகளில் பின்னிப் பிணைந்துள்ளதாகவும், இந்தியாவின் கூட்டு நாகரீக உணர்வின் உயிர்நாடி அது என்றும் கூறினார். இந்தியாவின் பல ரிஷிகள், முனிவர்கள் மற்றும் ஆச்சார்யர்கள், மதச்சார்பற்ற, உலகளாவிய வழிபாட்டு முறையின் மூலம் மக்களை உயர்த்தியதை சுட்டிக்காட்டிய திரு நாயுடு, “உலகமே ஒரே குடும்பம்” என்ற செய்தியைப் பரப்பியதற்காக ஸ்ரீலபிரபுபாதரைப் பாராட்டினார்.
ஸ்ரீலபிரபுபாதாவை சமத்துவ சிந்தனையின் ஜோதியாக வர்ணித்த குடியரசு துணைத் தலைவர், சமூகத்தால் நிராகரிக்கப்பட்டவர்களை அரவணைத்து அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்ததாகக் கூறினார். வேத அறிவு மற்றும் கலாச்சாரத்தின் மூலம் உலகளாவிய அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ஸ்ரீல பிரபுபாதரின் அயராத முயற்சிகளைப் பாராட்டிய திரு நாயுடு, "அவர் வலியுறுத்திய ஒரே அளவுகோல் பக்தி அல்லது கடவுளின் அன்பு" என்று கூறினார். தனது குருவின் பணியை முன்னெடுத்துச் செல்வதில் பெங்களூரு இஸ்கான் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீ மது பண்டிட் தாஸின் முயற்சிகளையும் குடியரசு துணைத் தலைவர் பாராட்டினார்.
கிருஷ்ணர் கோவிலின் பத்து மைல் சுற்றளவில் யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்ற சுவாமி பிரபுபாதாவின் விருப்பத்தை நினைவுகூர்ந்த குடியரசு துணைத்தலைவர், இஸ்கானின் அற்புதமான சேவை மனப்பான்மையைப் பாராட்டினார். இந்த சேவை உணர்வும், பகிர்தல் மற்றும் அக்கறையும், இந்திய விழுமியங்களின் மையமாகும் என்று குறிப்பிட்ட திரு நாயுடு, இளைஞர்கள் இந்த விழுமியங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நோக்கத்திற்காக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சமூக சேவையைக் கட்டாயமாக்க அவர் பரிந்துரைத்தார். ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் சமூகங்களுக்கு விலைமதிப்பற்ற சேவையை வழங்கியதற்காக - உலகின் மிகப்பெரிய தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் பள்ளி மதிய உணவுத் திட்டமான - இஸ்கான் தலைமையிலான அட்சய பாத்திரம் அறக்கட்டளையை குடியரசு துணைத் தலைவர் பாராட்டினார்.
டாக்டர் ஹிண்டோல் சென்குப்தாவின் இந்த நூல் வெளியீடு, ஸ்ரீல பிரபுபாதரின் 125 வது பிறந்தநாளில் அவருக்கு செலுத்தும் பொருத்தமான அஞ்சலி என்று திரு நாயுடு குறிப்பிட்டார். இந்தக் கொள்கையை அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க இந்த வாழ்க்கை வரலாறு அதன் வாசகர்களை ஊக்குவிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் இந்நூலை பல்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்குமாறு ஆசிரியரையும் பதிப்பாளர்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.
இஸ்கான் பெங்களூருவின் தலைவரும், அட்சய பாத்திரம் அமைப்பின் தலைவருமான திரு மது பண்டிட் தாசா, துணைத் தலைவர் திரு சஞ்சலபதி தாசா, நூலாசிரியர், இஸ்கான் பக்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்