பத்ம விருது பெற்ற பழங்குடியினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பழங்குடியினர் விவகார அமைச்சகம் சார்பில் பாராட்டு
பழங்குடியின எம்.பி.க்கள் மற்றும் பத்ம விருது பெற்ற பழங்குடியினருக்கு பழங்குடியினர் விவகார அமைச்சகம், பாராட்டு
இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவரான திருமதி திரௌபதி முர்முவின் வரலாற்று வெற்றியைக் கொண்டாடும் வகையில், பழங்குடியினர் விவகார அமைச்சகம், இன்று புதுதில்லியில் உள்ள தேசிய பழங்குடி ஆராய்ச்சி நிறுவனத்தில், நாடு முழுவதும் உள்ள பழங்குடியின பத்ம விருது பெற்றவர்கள் மற்றும் பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்து அளித்து கவுரவித்தது.
பழங்குடியின சமூகங்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்கான அவர்களின் தவிர்க்க முடியாத பங்களிப்பிற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பத்ம விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழாவை அமைச்சகம் ஏற்பாடு செய்தது. மேலும், அந்த இடத்தில் பத்ம விருது ஓபன் ஹவுஸ் சிறப்பு கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா, மத்திய பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் திருமதி. ரேணுகா சிங், மத்திய சிறுபான்மை விவகாரத்துறை இணை அமைச்சர் திரு ஜான் பர்லா, மத்திய எஃகு துறை இணை அமைச்சர் திரு ஃபக்கன் சிங் குலாஸ்தே, பழங்குடியினர் விவகார அமைச்சக அதிகாரிகள்மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பத்ம விருது பெற்றவர்கள் தங்களின் அனுபவங்களையும் போராட்டப் பயணங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா, பத்ம விருது பெற்றவர்கள் மற்றும் அவர்களின் பயணம் மற்றும் சாதனைகள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது என்று கூறினார். அவர்கள் சமூகத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கி, களத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய இந்த சாதனையாளர்களுக்கு நாம் நமது மரியாதையைச் செலுத்த வேண்டும் என்று திரு அர்ஜுன் முண்டா வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சி, இந்தியாவில் உள்ள பழங்குடியின சமூகங்களுக்கான ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாட்டை வலுப்படுத்துவதில் மற்றொரு மைல்கல்லாக உள்ளது. இந்தியாவில் சமத்துவம் மற்றும் ஒருமைப்பாட்டின் நீண்டகால பிணைப்பை இது வலுப்படுத்த உதவும்.
கருத்துகள்