தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா எட்டயபுரம் அருகேயுள்ள வீரப்பட்டி
மாணிக்கராஜா. இரண்டாண்டுகளாக வெளிநாட்டில் வேலைப் பார்த்து தற்போது உள்ளூரில் லாரி ஓட்டுநராகப் பணி செய்கிறார், அதே ஊரில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த உறவுக்காரப் பெண்ணான ரேஷ்மா என்பவரைக் காதலித்து வந்த நிலையில் ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி அதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார். எதிர்ப்பை மீறி ஜூன் மாதம் 29-ஆம் தேதி மாணிக்கராஜா, ரேஷ்மாவுடன் திருமணம் செய்த பின்னர் மதுரை மாவட்டம், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்புக் கேட்டு தஞ்சமடைந்த காரணமாக விசாரணை நடத்தி, இருவரும் மேஜர் என்பதால் பாதுகாப்புடன் இருக்கும் படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் எட்டயபுரம் காவல் நிலையத்தில் தனது மகளைக் காணவில்லை என, ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி புகார் செய்திருந்தார். ரேஷ்மா திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த நிலையில் எட்டயபுரம் காவல்துறை அவர்களை வீரப்பட்டிக்கு வரவேண்டாம் என எச்சரித்தனர். உறவினர்களும் அங்கு நிலைமை சரியில்லை தற்போது வர வேண்டாம் எனக் கூறியிருக்கின்றனர்.
திருமணம் செய்துகொண்டு 25 நாள்களே ஆன நிலையில், இருவரும் கொலை செய்யப்பட்டனர். கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளை முத்துக்குட்டியின் வீட்டிலிருந்து கைப்பற்றியிருக்கின்றனர். இது குறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து தலைமறைவான
முத்துக்குட்டியைத் தேடி வருகிறார்கள். இச் சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் அச்சம் கலந்த சோகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
கருத்துகள்