மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹக்தி, வழக்கின் விசாரணையை முன்கூட்டியே விசாரித்ததற்கு பாராட்டு தெரிவித்தார்.
பள்ளிக் குழந்தைகளால் காலை ஏழு மணிக்கு பள்ளிக்கு செல்ல முடியும் போது, நீதிபதிகள், வழக்கறிஞர்களால் ஏன் ஒன்பது மணிக்கு பணியைத் துவங்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதி யூ.யூ.லலித் கருத்து தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கமாக வார நாட்களில் காலை 10:30 மணி முதல் மாலை 4 மணி வரை வழக்குகள் விசாரிக்கப்படும். இந்த நிலையில், நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு, இன்று (ஜூலை 15) ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக காலை 09:30 மணிக்கே விசாரணையை துவக்கியது. ஜாமின் மனு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹக்தி, வழக்கின் விசாரணையை முன்கூட்டியே விசாரித்ததற்கு பாராட்டு தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி லலித், ‛என்னை பொறுத்தவரை, நாம் காலை 9 மணிக்கெல்லாம் நீதிமன்றத்திற்கு வந்து அமர வேண்டும். நமது குழந்தைகள் காலை 9 மணிக்கு பள்ளிக்கு செல்ல முடியும்போது, நீதிபதிகளும், வழக்கறிஞர்களாலும் ஏன் 9 மணிக்கு வர முடியாது? காலை 9 மணிக்கு நீதிமன்ற பணிகள் துவங்கி 11:30 வரை நடைபெற்று பிறகு அரை மணி நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் துவங்கி மதியம் 2 மணியுடன் விசாரணைகளை முடிக்கலாம். அப்போது தான் மாலையில் நீதிபதிகள் கூடுதல் பணிகளை செய்ய நேரம் கிடைக்கும்' எனக் கருத்து தெரிவித்தார்.தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகஸ்ட் 26 ஆம் தேதியுடன் ஓய்வு பெறுர். அவருக்கு அடுத்ததாக தலைமை நீதிபதியாக லலித் பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தலைமை நீதிபதியாக லலித் பொறுப்பேற்றால், அதன்பின், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை துவங்கும் நேரம் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்