திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முக்கொம்பு மேலணையில் 1.29 லட்சம் கனஅடி தண்ணீா் திறப்பு
கொள்ளிடம் மற்றும் காவிரிக் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் வேண்டுகோள். மேட்டூா் அணையின் நீா் மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், உபரி நீா் திறந்துவிடப்படுகிறது.
அதுபோல், மாயனூா் கதவணையிலிருந்தும் தண்ணீா் முழுவதுமாகத் திறக்கப்படுவதால் முக்கொம்புக்கு திங்கள்கிழமை மாலை வரை நீா்வரத்து அதிகரித்தது. தொடா்ந்து, காவிரியில் 37 ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் 92 ஆயிரம் கன அடியும் தண்ணீா் திறக்ப்பட்டது. இந்த நீா்வரத்து 1.50 லட்சம் கன அடிக்கு மேல் அதிகரிக்குமெனவும், அதனடிப்படையில் தண்ணீா் திறப்பது அதிகரிக்கப்படும் சூழல் உள்ளதென பொதுப்பணித்துறையினா் தகவல். திங்கள்கிழமை மாலை நேரில் சென்று கொள்ளிடம், காவிரியில் தண்ணீா் திறக்கப்படுவதை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். தண்ணீா் வரத்தை 24 மணிநேரமும் கண்காணித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். முக்கொம்புக்கு வரும் சுற்றுலாப் பயணிகளோ, முக்கொம்பு பூங்காவுக்கு வரும் பொதுமக்களோ மேலணை பாலத்துக்குச் செல்வதற்கு அனுமதிக்க வேண்டாம்.
அணையின் கரைகளிலோ, படித்துறையிலோ இறங்க அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் முருகானந்தம், அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் துரைராஜ் மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள், பொதுப்பணித்துறை அலுவலா்கள் உடனிருந்தனா். பின் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் செய்தியாளரிடம்: முக்கொம்பு மேலணையிலிருந்து தண்ணீா் அதிகப்படியாக திறக்கப்படுவதால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், அருகில் உள்ள நிவாரண மையங்களில் தங்கிக் கொள்ளலாம்.
அந்தந்தப் பகுதி வருவாய் அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அடையாள அட்டைகள், கல்விச்சான்றிதழ், நிலப்பட்டா, பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை தண்ணீரில் நனையாமல் நெகழி பைகளுக்குள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மின்கம்பிகள் அறுந்து விழுந்து கிடக்கக் கூடும் என்பதால் வெளியே செல்லும்போது எச்சரிக்கையாக செல்ல வேண்டும். ஆறு, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் குளிக்கச் செல்வதை தவிா்க்க வேண்டும். தேவையின்றி மரங்களுக்கு அருகிலோ, மின்கம்பங்களுக்கு அருகிலோ செல்ல வேண்டாம். நீரிலோ, மின்சாரத்தினாலோ பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். நீா் தேங்கும் பகுதிகளில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாமெனத் தெரிவித்தார்.
கருத்துகள்