பிரதமரின் வீட்டு வசதி- நகர்ப்புற திட்டமான “அனைவருக்கும் வீடு” இயக்கத்தை 2024, டிசம்பர் 31 வரை தொடர அமைச்சரவை ஒப்புதல்
பிரதமரின் வீட்டு வசதி- நகர்ப்புற திட்டமான “அனைவருக்கும் வீடு” இயக்கத்தை 2024, டிசம்பர் 31 வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வீட்டு வசதி திட்டங்களை முடிப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவை என மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் விடுத்த வேண்டுகோளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது
இத்திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட 122.69 லட்சம் வீடுகளை கட்டுவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது
பிரதமரின் வீட்டு வசதி- நகர்ப்புற திட்டமான “அனைவருக்கும் வீடு” இயக்கத்தை 2024, டிசம்பர் 31 வரை தொடர பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று(10.08.2022) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் அனுமதி அளித்துள்ளது. எனினும், மார்ச் 31, 2022 வரை அனுமதி அளிக்கப்பட்ட 122.69 லட்சம் வீடுகளை கட்டி முடிப்பதற்கான நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
அனைவருக்கும் வீடு என்ற பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டமானது, மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள்/ மத்திய முகமைகளின் வாயிலாக நகர்ப்புறங்களில் வசிக்கும் தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் அனைத்து பருவநிலையையும் எதிர்கொள்ளும் வீடுகளை வழங்கும் இந்திய அரசின் முன்னோடி திட்டங்களில் ஒன்றாகும். மத்திய அரசின் நிதி உதவியோடு, பயனாளிகளை தேர்ந்தெடுத்து மாநில/ யூனியன் பிரதேச அரசுகள் இத்திட்டத்தை அமல்படுத்துகின்றன.
நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 2004 முதல் 2014 வரை 8.04 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. நகர்ப்புறங்களில் வசிக்கும் தகுதி உள்ளவர்கள் அனைவருக்கும் வீடு வழங்குவதை மோடி அரசு கவனத்தில் கொண்டு பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் கொண்டுவரப்பட்டது. 100 லட்சம் வீடுகளை வழங்க 2017-ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டது. இதற்கு மாறாக 102 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றில் 62 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஒப்புதல் அளிக்கப்பட்ட 123 லட்சம் வீடுகளுள் 40 லட்சம் வீடுகளுக்கான திட்ட முன்மொழிவுகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடமிருந்து தாமதமாக வந்ததால் அவற்றை நிறைவு செய்ய மேலும் இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது. இந்நிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கோரிக்கையை ஏற்று இத்திட்டத்தை 31.12.2024 வரை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2004-2014 வரை ஒப்புதல் அளிக்கப்பட்ட ரூ. 20,000 கோடிக்கு மாறாக 2015 முதல் ரூ. 2.03 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்க அனுமதி அளித்தது. மார்ச் 31, 2022 வரை ரூ. 1,18,020.46 கோடி உதவியை மத்திய அரசு விடுவித்திருப்பதோடு, டிசம்பர் 31, 2024க்குள் ரூ. 85,406 கோடி விடுவிக்கப்படும்.
கருத்துகள்