திருவாரூர் மாவட்டம், கடாரம் கொண்டானில் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி உள்ளது.
இங்கு தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டத்திற்காக நேற்று நடைபெற்ற தேர்வில் இளைஞர் ஒருவர் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடர்பாக, தேர்வுக் கண்காணிப்பாளர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது உண்மையான பெயர் திவாகர் மாதவன் என்பதும், பாரதிய ஜனதா கட்சியின் திருவாரூர் மாவட்டத் தலைவராக உள்ள பாஸ்கர் என்பவருக்குப் பதிலாக தான் தேர்வு எழுத வந்ததாகவும் கூறினார்.அதனைத் தொடர்ந்து, தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர் நாகரத்தினம் திருவாரூர் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதிய திவாகர் மாதவனிடம் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், தனக்கு ஏற்கெனவே அறிமுகமானவர் ரமேஷ் என்றும், அவர்தான் தன்னை, பாரதிய ஜனதா கட்சியின் திருவாரூர் மாவட்டத் தலைவர் பாஸ்கருக்குப் பதிலாக தேர்வு எழுத ஏற்பாடு செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார், அதையடுத்து, திருவாரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கல்வியாளர் பிரிவுச் செயலாளர் ரமேஷ் என்றும் நபர் கைது செய்யப்பட்டார்.
திவாகர் மாதவனிடம் இருந்து திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கரின் தேர்வு நுழைவுச்சீட்டு மற்றும் அவருடைய புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டையையும் கைப்பற்றினர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பாஸ்கர் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்தார். பாஸ்கர் மீது வழக்கு பதிவுசெய்து அவரைக் கைதுசெய்த காவல்துறையினர், அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்