மதுரை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான டாக்டர் சரவணன் கட்சியிலிருந்து விலகினார்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த மதுரை மாவட்ட இராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்ற தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது பாஜகவினர் நேற்று காலணியை வீசிய சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மதுரை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் சரவணன் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வீட்டிற்குச் நேரில் சென்று தனது வருத்தத்தை தெரிவித்தார் அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் சரவணன் தான் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, எனக்கு வெறுப்பு அரசியல், மத அரசியல் ஒத்துவரவில்லை. எனது மனதில் உள்ள விஷயத்தை அமைச்சரிடம் தெரிவித்தேன்.
நான் பாஜக வில் இனிமேல் தொடரப்போவதில்லை. இன்று காலை என் ராஜினாமா கடிதத்தைக் கொடுப்பேன். சுயமரியாதையுடன் இருக்க வேண்டும். திமுகவில் இணைவது குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை. இது குறித்து உங்களிடம் கூறாமல் செய்யமாட்டேன். செய்தாலும் தப்பில்லை. திமுக தாய் வீடு தானே. பதினைந்து ஆண்டுகளாக நான் உழைத்த கட்சி திமுக' என்றார்.
திமுகவை சேர்ந்த டாக்டர் சரவணன் தனக்கு சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்காத நிலையில் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவர் மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவராக செயல்பட்டார் தற்போது டாக்டர் சரவணன் பாஜகவிலிருந்து விலகிய நிலையில் அவர் மீண்டும் திமுகவில் இணையலாம்.
டாக்டர் சரவணன் முன்பே விலகுவதாக அறிவித்தார் அதன் பின்னர் தான் நீக்கப்படுவதாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பில் ஒரு முந்திரிக்கொட்டைத் தனம் தெரிகிறது.
அவர் விலகிய பின் நீக்கம் எதற்கு என்பது பலரது வினா. பாஜகவின் மீது குற்றச்சாட்டு சுமத்தி வெளியேறும் டாக்டர் சரவணன் அறிவிப்பு முதலில் வந்த நிலையில் இந்த நீக்கம் யாரிடமும் எடுபடவில்லை என்பதே உண்மை
கருத்துகள்