ஆபரேஷன் ஆக்டோபஸ் முடிவில் சட்டவிரோத இயக்கமாக 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 8 அமைப்புக்கள்
உபா எனும் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின்படி, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 8 அமைப்புகளும் சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' (பி.எப்.ஐ) மிகவும் ஆபத்தான இயக்கமென தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர். என் ரவி குறிப்பிட்டிருந்த நிலையில் ஆபரேஷன் ஆக்டோபஸ் திட்டத்தின் படி மத்திய அரசு கையிலெடுத்து மொத்தம் 270 பேர் இந்த அமைப்புடன் தொடர்பிலிருந்ததாகக் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கலவரத்தை உருவாக்கியதாகவும், சட்ட விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக ஆட்களைச் சேர்த்ததாகவும் அந்த அமைப்பு மீது குற்றஞ்சாட்டப்பட்டதையடுத்து
முதல் கட்டமாக செப்டம்பர் 22 ஆம் தேதி என்ஐஏ ரெய்டு நடத்தியது. 15 மாநிலங்களில் பி.எப்.ஐ. இயக்கம் தொடர்பான நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 93 இடங்களில் மாநில அரசின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட மிகப் பெரிய சோதனைகளின் போது அந்த இயக்கத்தின் 106 தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தான் இந்த ஆபரேஷனின் துவக்கம். அதில் கண்டுபிடிக்கப்பட்ட ஆவண, ஆதாரங்களின் அடிப்படையில் இரண்டாவது சோதனை நடத்தப்பட்டது. எட்டு மாநிலங்களில் நேற்று முன்தினம் பி.எப்.ஐ. நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்களில் என்.ஐ.ஏ. ரெய்டு நடத்தப்பட்டதில். 200-க்கும் மேற்பட்ட பி.எப்.ஐ. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகாவில் 60; அஸ்ஸாமில் 8; மகாராஷ்டிராவில் 6 பி.எப்.ஐ. நிர்வாகிகள் கைதாகினர். டெல்லியில் 30; உ.பி.யில் 10; ம.பி.யில் 21 பி.எப்.ஐ. நிர்வாகிகள் கைதாகினர். அதற்கு முன்பே தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த அமைப்பிற்கு எதிராக கைது நடவடிக்கைகள், சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக 1000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிகாரிகள், என்ஐஏ அதிகாரிகள் களமிறக்கப்பட்டனர்.
ஏற்கனவே இந்த அமைப்பு மீது சட்ட விரோதப் பணப்பரிமாற்றம், சட்ட விரோத கூட்டம் சேர்த்தல், அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், கொலை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 19 வழக்குகள் உள்ள நிலையில்தான் இந்த ஆபரேஷன் முடிவில் தான் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டது. இவர்கள் வெளிப்படையாக சமூக சேவை அமைப்பு போல செயல்பட்டாலும், உள்ளே அவர்கள் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்களைச் செய்து வருகிறார்கள் எனவும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள் எனவும். முக்கியமாக குறிப்பிட்ட சமுதாய மக்களை ஓரம்கட்டி, அவர்களை தப்பான திசைக்குக் கொண்டு செல்கிறார்கள் எனவும். இவர்கள் நீதிக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் எனவும். இதன் மூலம் நாட்டின் அமைதிக்கு கேடு விளைவிக்கிறார்கள், என்று கூறி இந்த அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இயங்கி வந்த தேசிய வளர்ச்சி
முன்னணி(என்.டி.எஃப்), தமிழ்நாட்டின் மனித நீதிப் பாசறை, கர்நாடகாவைச் சேர்ந்த ஃபோரம் ஃபார் டிக்னிட்டி ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து 2007 ஆம் ஆண்டு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உருவானது முதல் இந்த அமைப்பு மீது என்ஐஏ வின் கண்காணிப்பு இருந்து வந்தது. இவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து எப்படிப் பணம் வருகிறது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசிதழில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதற்கு தொடர்புடைய அமைப்புகளான கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, அனைத்திந்திய இமாம் கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகள், பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமலிங்கம், சசிகுமார், கர்நாடகாவைச் சேர்ந்த பிரவீன் நெட்டார் உள்ளிட்டோர் கொலை வழக்கில் இந்த அமைப்புக்குத் தொடர்பிருப்பதும் தெரியவந்துள்ளதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. சர்வதேசப் பயங்கரவாத அமைப்புகளுடன் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தொடர்பில் இருந்ததாக தெரிவித்துள்ள மத்திய அரசு, அந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்ததுடன், சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
பி எப்ஐ மற்றும் அதனுடன் சேர்ந்த இயக்கங்கள் சட்டவிரோதமானவை தமிழ்நாடு அரசு உத்தரவு
இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்ற, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக நிதி வசூல் செய்ததன் காரணமாகவும், இந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டுமென உத்தரபிரதேசம், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்கள் பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், உபா எனப்படும் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின்படி, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா, தேசிய மனித உரிமைக் கழக கூட்டமைப்பு உள்ளிட்ட 8 அமைப்புகளும் சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த அமைப்புகள் ஐந்து ஆண்டுகள் செயல்பட தடை விதிக்கப்படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்