கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாட்டிற்கான குறிப்பிடத்தக்க சாதனை என்பதை தேசிய கல்விக் கொள்கை நிரூபிக்கும்: மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர்
புதிய கல்விக் கொள்கையின் வாயிலாக 34 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாட்டு, கல்வி மற்றும் திறன் வளர்ச்சியிலும், பிராந்திய மொழி கல்வியிலும் சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். ஜலந்தரில் தோபா கல்லூரியின் 65-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், திறன் இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில் இளைஞர்களுக்கு அதிகபட்ச வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதோடு, மென் திறன்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படுவதன் மூலம் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சிறந்த தொழில்வளத்தை இளைஞர்கள் பெறுவதற்கு எண்ணிலடங்காத வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்றைய யுகம் பெண்களின் வளர்ச்சிக்குரியது என்று கூறிய அமைச்சர், அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக கல்வியிலும் விளையாட்டிலும் பெண்கள் முன்னேறி வருவது இதற்கு மிகப்பெரிய சான்றாக திகழ்கிறது என்றும், இந்தியா மாறி வருவதையும் இது உணர்த்துகிறது என்றும் தெரிவித்தார். இந்திய பொருளாதாரம் உலக அளவில் 11-வது இடம் வகிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அமல்படுத்தி தனது வெற்றியை உலக நாடுகளுக்கு இந்திய அரசு பறைசாற்றியிருப்பதாகத் தெரிவித்த திரு அனுராக் தாக்கூர், இதன் காரணமாகவே நாட்டில் மென்மேலும் அதிகமான நிதி பரிமாற்றங்கள் இணைய வழி வாயிலாகவும் யு.பி.ஐ தளம் வாயிலாகவும் மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார். வெற்றிகரமான டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் வாயிலாக டிஜிட்டல் இந்தியா என்ற கனவை சமூகத்தின் அனைத்து தரப்பினரும் நனவாக்கியதற்காக நாட்டு மக்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றை நட்டார்.
கருத்துகள்