பெகட்ரானின் புதிய மின்னணு சாதனங்கள் உற்பத்தி தொழிற்சாலையை மத்திய இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் தமிழ்நாட்டில் தொடங்கிவைக்கிறார்
மத்திய அரசின் பிரபலமான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தைவானின் மின்னணு சாதன ஜாம்பவானான பெகட்ரானின் புதிய செல்பேசி தயாரிப்பு தொழிற்சாலை சென்னையை அடுத்த செங்கல்பட்டு தொழிற் பூங்காவில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்வில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் கவுரவ விருந்தினராக கலந்துகொள்வார்.
2014-15-ல் செல்பேசி உற்பத்தியின் மதிப்பு ரூ. 18,900 கோடி அளவுக்கு குறைந்திருந்த நிலையில், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் முதல் ஆண்டுக்குள் 28 சதவீதம் அதிகரித்து, ரூ.60000 கோடி என பதிவாகியது. தற்போது மேலும் 14 மடங்கு உயர்ந்து, ரூ.2,75,000 கோடி என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது
2015-16ல் செல்பேசி ஏற்றுமதி ஏறத்தாழ பூஜ்யம் என்ற நிலையில் இருந்தது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம் போன்றவற்றால் 2019-20ல் ஏற்றுமதி மதிப்பு ரூ.27,000 கோடியை தொட்டது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் முதலாண்டிற்குள் 66 சதவீதம் அதிகரித்து, ரூ. 45,000 கோடியை எட்டியது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல்-ஆகஸ்ட் வரையிலான முதல் 5 மாதங்களில் செல்பேசி ஏற்றுமதி 140 சதவீதம் உயர்ந்து, ரூ.25,000 கோடியாக அதிகரித்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில், இந்த மதிப்பு ரூ.10,300 கோடியாக இருந்தது.
பெகட்ரான் நிறுவனம் குறித்து:
இந்த நிறுவனம் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கானதாகும். தகவல் தொடர்பு சாதனங்கள், கணக்கிடும் சாதனங்கள், நுகர்வோருக்கான மின்னணு பொருட்கள் ஆகியவற்றின் தொழில் நுட்பங்களில் முன்னணியில் உள்ளது. மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனங்களில் பெகட்ரான் நிறுவனம் உலக அளவிலான தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2021-ல் பார்ச்சூன் குளோபல் 500 தரவரிசையில், 235-ஆக இந்நிறுவனம் இருந்தது. இந்த நிறுவனம், தென்கிழக்கு ஆசியா, இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றில் உற்பத்தி நிறுவனங்களை கொண்டுள்ளது. 2022 ஜூலை மாதத்தில் இதன் துணை நிறுவனமான பெகட்ரான் இந்தியா தொடங்கப்பட்டது.
கருத்துகள்