பிரதான ஊடகத்திற்கான மிகப்பெரும் அச்சுறுத்தல், பிரதான ஊடகமே:
மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர்
ஒளிபரப்பு மேம்பாட்டுக்கான ஆசிய-பசிபிக் நிறுவனத்தின் 47-வது வருடாந்திர கூட்டம் மற்றும் 20-வது கூட்டத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், செயலாளர் திரு அபூர்வ சந்திரா மற்றும் நிறுவனத்தின் இயக்குநர் திருமிகு ஃபிலோமினா ஞானபிரகாசம் ஆகியோர் முன்னிலையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் இன்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு தாக்கூர், பிரதான ஊடகத்திற்கு புதுயுக டிஜிட்டல் தளங்கள் அச்சுறுத்தலாக செயல்படவில்லை என்றும், மாறாக பிரதான ஊடகமே மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகவும் குறிப்பிட்டார். உண்மைகளை எதிர்கொள்வது, நடக்கும் செயல்களை தெரிவிப்பது மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரின் கருத்துக்களையும் எடுத்துரைப்பது தான் பத்திரிக்கை தர்மம் என்று அவர் தெரிவித்தார்.
முரண்பாடான கருத்துக்கள் கொண்ட, தவறான செய்திகளை பரப்பும் மற்றும் கூச்சல் போடும் விருந்தினர்களை அழைப்பது, ஒரு தொலைக்காட்சியின் நம்பகத்தன்மையைக் கெடுக்கிறது என்று அமைச்சர் கூறினார். “விருந்தினர், தொனி மற்றும் ஒளி அமைப்புகள் தொடர்பான உங்கள் முடிவுகள், பார்வையாளர்களின் கண்ணோட்டத்தில் உங்களது நம்பகத்தன்மையை வரையறுக்கிறது. பார்வையாளர்கள் உங்கள் நிகழ்ச்சியை ஒரு நிமிடம் பார்க்கக்கூடும், ஆனால் உங்கள் அறிவிப்பாளரையும், உங்கள் தொலைக்காட்சியையும், பிராண்டையும் நம்பகமான மற்றும் வெளிப்படையான செய்தி ஆதாரமாக ஒருபோதும் நம்ப மாட்டார்கள்”, என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஒலி பதிவுகளைக் கருத்தில் கொள்ளாமல், ஒளிப்பதிவாளர்கள் தாங்களே அதை மறுவரை செய்து, விருந்தினர்கள் மற்றும் தொலைக்காட்சிக்கான விதிமுறைகளை அமைக்குமாறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒளிப்பதிவாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
கொவிட் காலத்தின் போது உறுப்பு நாடுகளை இணையவழியாக இணைத்ததற்காகவும், தொற்றின் தாக்கத்தை ஊடகங்கள் எவ்வாறு குறைக்கலாம் என்பது குறித்த நிலையான பேச்சுவார்த்தையை மேற்கொண்டதற்காகவும் ஒளிபரப்பு மேம்பாட்டுக்கான ஆசிய-பசிபிக் நிறுவனத்தின் தலைமை பண்பை அமைச்சர் பாராட்டினார். “பெருந்தொற்றை விட வேகமாகப் பரவிய தவறான செய்திகளை கட்டுப்படுத்தியது, மருத்துவத் துறையின் சமீபத்திய வளர்ச்சி, கொவிட் முன்கள வீரர்கள் குறித்த நேர்மறையான செய்திகள் போன்றவற்றினால் உறுப்பு நாடுகள் பெருமளவு பயனடைந்தன”, என்றார் அவர்.
‘பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் ஒளிபரப்புத் துறையின் வலுவான எதிர்காலத்தை கட்டமைத்தல்’ என்ற நிகழ்ச்சியின் கருப்பொருள் பற்றி பேசிய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், ஒளிபரப்பு ஊடகம் பத்திரிக்கை துறையின் பிரதான ஊடகமாக இருந்த போதும், கொவிட்-19 காலம் அதன் அமைப்பிற்கு மறுவடிவம் அளித்துள்ளது என்றும், சரியான மற்றும் உரிய நேரத்தில் அளிக்கப்படும் தகவல்கள், லட்சக்கணக்கான உயிர்களை எவ்வாறு பாதுகாக்கும் என்பதை பெருந்தொற்று உணர்த்தியுள்ளது என்றும் கூறினார்.
தரமான படைப்புகளை பரிமாற்றிக் கொள்ளும் துறையில் உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அமைச்சர், இது போன்ற ஒத்துழைப்புகள் மக்களிடையே வலுவான இணைப்பை கட்டமைக்க உதவும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் போது 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கான விருதுகளை அமைச்சர் வழங்கினார். 2022-ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது பிரச்சார் பாரதியின் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியும், ஒளிபரப்பு மேம்பாட்டுக்கான ஆசிய-பசிபிக் நிறுவனத்தின் தலைவருமான திரு மயங்க் அகர்வாலுக்கு வழங்கப்பட்டது.
கருத்துகள்