உயிரோடு இருக்கும் முன்னால் கணவருக்கு இறப்பு சான்று வாங்கிய விவாகரத்தான மனைவி
சிவகங்கை : உயிரோடு இருக்கும் தன்னை இறந்ததாக சான்று பெற்று, அதனடிப்படையில் வாரிசு சான்றும் பெற்று தனது பெயரில் உள்ள சொத்தை விற்பனை செய்த முன்னாள் மனைவி மற்றும் ஊழலுக்கு துணை போன கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சந்திரசேகர் (வயது 42), புகார் அளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கண்டனுார் கலாமந்திரம் தெருவைச் சேர்ந்தவர் அ.சந்திரசேகர் கொடுத்துள்ள மனுவில் நான் காரைக்குடி தாலுகா கண்டனூர் அருணாச்சலம் - வாசுகி தேவியின் இரண்டாவது மகன் சந்திரசேகர். மளிகை கடையில் பணிபுரிந்து வருகிறேன். கலாமந்திரம் தெருவில் எனது பெற்றோருடன் வசிக்கிறேன். எனக்கும் காரைக்குடியைச் சேர்ந்த மணிராஜ் என்பவரின் மூத்த மகள் நதியா ஸ்ரீ (வயது 36), என்பவருக்கும் 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்., 8 ஆம் தேதியில் திருமணம் நடந்தது. 2 குழந்தைகளும் உள்ளனர்.
மனகசப்பு காரணமாக 2018 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்று விட்டோம். மாத்துார் ரோட்டில் எனக்குச் சொந்தமானது 11.25 சென்ட் காலிமனையை நான் விற்பனை செய்ய முயற்சித்த போது ஏற்கனவே காரைக்குடியை சேர்ந்த கலைக்கோவன் என்பவருக்கு 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவநது அது குறித்து காரைக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் விசாரித்த போது நான் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்., 24 ஆம் தேதியில் இறந்து விட்டதாக இறப்பு சான்றிதழை காரைக்குடி நகராட்சியில் எனது முன்னாள் மனைவி நதியா ஸ்ரீ போலியாகப் பதிவு செய்து ஊழல் அதிகாரிகள் உதவியில் பெற்றுள்ளார்.
அதனடிப்படையில் தன்னை வாரிசாகவும், குழந்தைகளை மைனர் எனவும் காண்பித்து வாரிசு சான்றிதழ் பெற்று சொத்தை விற்பனை செய்துள்ளார். சார்பதிவாளர் அலுவலகத்தில் புகார் செய்ததன் பெயரில் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்., 18 ஆம் தேதியில் விற்பனைப் பத்திரம் ரத்து செய்யப்பட்டது. உயிரோடு இருக்கும் என்னை இறந்ததாக தெரிவித்து இறப்பு சான்றிதழ் பெற்று, அதனடிப்படையில் திட்டமிட்டு வாரிசு சான்றிதழ் வழங்கிய நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறையினர், பத்திரப்பதிவுக்கு உடந்தையாக இருந்த சார்பதிவாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.
சந்திரசேகர் கூறியது:
இந்த முறைகேடு குறித்து ஏற்கனவே மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். அதில் நடவடிக்கை இல்லாததால் மாவட்ட ஆட்சித்தலைரிடம் மனு அளித்துள்ளேன், என்றார். இதுபோன்ற பல ஊழல்களில் ஊறிப்போன அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் நிர்வாகம் என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
கருத்துகள்