உத்தராகண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின்
மூத்த தலைவர் வினோத் ஆர்யா. முன்னாள் அமைச்சராவார்.
அவரது மகன் புல்கிட் ஆர்யாவுக்கு ரிஷிகேஷ் அருகில் சொகுசு விடுதி உள்ளதில் வரவேற்பாளராகப் பணியாற்றிய அங்கிதா பண்டாரியை (வயது 19) ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் காணவில்லை. அது குறித்து அங்கிதாவின் தந்தை, சொகுசு விடுதியின் உரிமையாளர் புல்கிட் ஆர்யா ஆகியோர் காவல்துறையில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் காவல்துறை அங்கிதாவை தீவிரமாகத் தேடிய. நிலையில் விசாரணையின் போது வரவேற்பாளர் அங்கிதாவை, புல்கிட் ஆர்யா தான் கொலை செய்தாரென்று தெரியவே. புல்கிட் ஆர்யா உள்ளிட்ட மூவரை காவல்துறை கைது செய்து விசாரிக்கின்றனர்.
அங்கிதாவின் உடலையும் மீட்டனர். அங்கிதா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புல்கிட் ஆர்யாவின் சொகுசு விடுதியை இடித்துத் தள்ள மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் விடுதி சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி விடுதியின் குறிப்பிட்ட பகுதிகளை அதிகாரிகள் இடித்தனர்.இதனிடையே புல்கிட்டின் தந்தை வினோத் ஆர்யாவுக்கு எதிராக பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தின்போது சொகுசு விடுதியின் சில பகுதிக்கு பொதுமக்கள் தீ வைத்தனர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் காரும் அடித்து நொறுக்கப்பட்டது. போராட்டம் தீவிரமடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட புல்கிட் ஆர்யாவின் தந்தையான வினோத் ஆர்யாவை பாரதிய ஜனதா கட்சியிலிருந்து மேலிடம் நேற்று முன்தினம் நீக்கியது.
மேலும், புல்கிட் ஆர்யாவின் சகோதரனான அங்கித் ஆர்யாவையும் கட்சியிலிருந்து நீக்கியத. இளம்பெண் கொலையைக் கண்டித்து உத்தராகண்டின் ஸ்ரீநகர் பகுதியில் நேற்று மூன்றாவது நாளாக போராட்டம் நடைபெற்றதனால் ரிஷிகேஷ்-பத்ரிநாத் சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. கொலையான இளம்பெண்ணின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
காவல்துறை விசாரணையில் விடுதியின் உரிமையாளர் புல்கிட் ஆர்யா மற்றும் விடுதி ஊழியர்கள் சேர்ந்து அங்கிதாவை கொலை செய்திருப்பது 23-ஆம் தேதி தெரியவந்தது. ரிஷிகேஷில் உள்ள கால்வாயிலிருந்து அவரது உடல் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது.
கொலை வழக்கு தொடர்பாக புல்கிட் ஆர்யா, விடுதி மேலாளர் சவுரப் பாஸ்கர், உதவி மேலாளர் அங்கித் குப்தா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது, "விடுதியில் வரவேற்பாளராக பணியாற்றிய அங்கிதா பண்டாரியை பாலியல் தொழிலில் தள்ள புல்கிட் ஆர்யாவும் ஊழியர்களும் வற்புறுத்தியுள்ளனர். அவர் மறுக்கவே அவரைக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்" என்று தெரிவித்தனர்.
அங்கிதா பண்டாரியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை நேற்று கிடைத்தது. அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதும், உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதும் இந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
அவரது உடல் நேற்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை தகனம் செய்ய மறுத்து உறவினர்கள் ஸ்ரீநகரில் சாலைமறியலில் ஈடுபட்டனர். மூன்றாவது நாளாக அவர்கள் போராட்டம் நடத்தியதால் ரிஷிகேஷ்-பத்ரிநாத் சாலையில் போக்குவரத்து முடங்கியது.
கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று காவல்துறை தரப்பில் உறுதி அளித்ததன் பேரில் அங்கிதாவின் உடலை தகனம் செய்ய உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். இதைத் தொடர்ந்து என்ஐடி படித்துறையில் உடல் தகனம் செய்யப்பட்டது.
கருத்துகள்