மைசூர் அரசர்கள் உண்டு சுவைத்து ரசித்த "மைசூர் பாகு"
அரண்மனையைத் தாண்டி மக்களின் நாவிற்கும் வந்து சேர்ந்தது மைசூர் பாகு என்ற பெயரில். 1950ஆம் ஆண்டிலிருந்து இந்த இனிப்பு கர்நாடகம் மட்டுமல்லாது தென் மாநிலங்களின் தவிர்க்க முடியாத இனிப்பாகும்.
அது போல சந்தன சோப். நறுமண `மைசூர் சேன்டல்` 1916 ஆம் ஆண்டில் பொது மக்களின் பயன்பாட்டில், இருந்து வருகிற ஒன்று. மைசூர் பட்டும் அப்படித்தான். இந்தியாவின் 70 சதவீத பட்டு உற்பத்தி கர்நாடகாவில் செய்யப் படுகிறதென்பது யதார்த்தம். மைசூர் பட்டாடை எவரையும் எளிதில் கவர்ந்து விடும் என்பது மறுக்க முடியாத உண்மை. மைசூர் மல்லி மாண்டியா மாவட்டத்திலும் ஸ்ரீரங்கப் பட்டினத்திலும் அதிகம் பயிரிடப்படும் பூ வகை. இது மலராகவும் நறுமணப் பவுடராகவும், சென்டாகவும் எல்லோரையும் வசீகரித்து வைத்துள்ளது.
இப்படி வரலாற்றுப் பெருமை கொண்ட மைசூர் மல்லி, மைசூர் பாகு, மைசூர் பட்டு, மைசூர் சேன்டல் , மைசூர் போண்டா, மைசூர் மசாலா தோசையும் இன்னும் முக்கியமாக மைசூரின் தசாரப் பண்டிகையின் பெயரும் அடங்கும். உலகம் முழுவதும் விரும்பும் இனிப்பு வகையான மைசூர்ப்பாகு. இதற்கும் மைசூருக்கும் என்ன சம்பந்தம் ? இந்த இனிப்பு வகை முதலில் உருவான இடம் மைசூர், மன்னரின் அரண்மனையில்தான்
1884 ஆம் ஆண்டு முதல் 1940 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வாழ்ந்த மைசூர் மகாராஜா, கிருஷ்ணராஜா உடையார் தேர்ந்த ரசனையுள்ள ரசிகர். இசை, நடனம், இலக்கியம் போலவே நல்ல உணவின் ரசிகர். அம்பா விலாஸ் அரண்மனையில் பூஜைகளுக்கு நைவேத்தியம், பிரசாதம் தயாரிக்கத் தனிச் சமையலறை உண்டு, ஐரோப்பிய நண்பர்களுக்கு விருந்து தயாரிக்கத் தனிச் சமையலறை, மன்னரின் ராஜபோஜனம் தயாரிக்கத் தனியறை என ஒரு சமையல் வளாகமே இருக்க. ஒரு நாள் மன்னர்
முன்னறிவிப்பில்லாமல் மதிய உணவுக்கு வந்த நிலையில் அவருக்குத் தினமும் உணவின் இறுதியில் அன்று புதிதாகச் செய்த சூடான இனிப்பு வகையாக இருக்க வேண்டும்.
அரண்மனையின் தலைமைச் சமையல்கார மேஸ்திரி காக்கசுராமடப்பா, அன்று அவசர அவசரமாக இராஜாவுக்கான மதிய உணவைத் தயாரித்துக் கொண்டிருந்த போது, திட்டமிடாததால் ஸ்வீட் என்ன செய்வது எனத் தெரியாமல் திணறிக்கொண்டிருந்தார். இராஜா சாப்பிட்டு முடிப்பதற்குள், ஸ்வீட்டைத் தயாரித்தாக வேண்டும் என்ற நிலை.
அப்போது அவசரமாக கையில் கிடைத்த கடலை மாவு, நெய் மற்றும் சர்க்கரையை வைத்துச் சூடான ஒரு கலவையைத் தயாரித்தார் மடப்பா. மகாராஜா உணவைச் சாப்பிட்டு முடிப்பதற்குள், இனிப்பு பரிமாறப்பட்டது. அந்த இனிப்பைச் சாப்பிட்டு மெய்மறந்து போன மைசூர் மகாராஜா. "இதற்கு என்ன பெயர்?" என மடப்பாவிடம் கேட்டபோது, உடனடியாக ஒரு பெயரைச் சொல்லவேண்டுமே என்ற பதற்றத்தில் - இனிப்புப் பாகில் செய்யப்பட்ட பண்டம் என்பதாலும், மைசூரில் செய்யப்பட்டது என்பதாலும், இரண்டையும் சேர்த்து, 'மைசூர் பாகு' எனச் சொல்லிவிட்டார். மன்னருக்கு அதுவே மிகவும் பிடித்து விட்டதால் அது எல்லோருக்கும் பிடித்துவிட்டது. பெயரும் அப்போது நிலைத்து விட்டது.
இராஜா விரும்பிச் சாப்பிடும் ராயல் ஸ்வீட் என்பதால் அதை மக்களும் சாப்பிட விரும்பியதால் அரண்மனைக்கு எதிரே கடை அமைத்து மைசூர்ப்பாகு தயாரித்து விற்க காக்கசுரா மடப்பாவை அனுமதித்திருக்கிறார் மன்னர். அந்தக் கடைதான், மைசூர் சயாஜி சாலையிலிருக்கும் குரு ஸ்வீட்ஸ்.
இப்போது ஐந்தாவது தலைமுறையான மடப்பாவின் கொள்ளுப்பேரன் நட்ராஜன் மற்றும் அவரது சகோதரர்களும் இந்தப் பிரபலக் கடையின் உரிமை யாளர்கள். தாத்தாவின் சமையல் திறனைப் பாராட்டி மன்னர் கொடுத்த 12 அறைகள் கொண்ட வீட்டில் இவர்களுடைய 30 பேர் கொண்ட கூட்டுக் குடும்பம் இன்னும் வசிக்கிறது. மைசூர்ப்பாகு தயாரிப்பும் அங்கே தான்.
“ஒரு வினாடி தவறினால் கூடத் தயாரிக்கப்படும் பாகின் நிலை மாறி மைசூர்ப்பாகின் சுவை மாறிவிடும்'' என்று சொல்லும் இவரது தாயார் தான் இன்றும் இந்த மைசூர்ப்பாகிற்குத் தேவையான பாகைத் தயாரிக்கிறார். மருமகள்கள் உதவி செய்வதால் ரெசிபியின் சீக்ரெட் அடுத்த தலைமுறைக்கும் சென்று கொண்டிருக்கிறது. ''எங்கள் தயாரிப்பு மூன்று வாரங்கள் வரை சுவை குறையாமல் இருக்கும். ஃப்ரிட்ஜில் வைக்கத் தேவை இல்லை” என்று சொல்லும் நட்ராஜ், "திருமணங்கள், பார்ட்டிகள் போன்ற ஆர்டர்களை நாங்கள் ஏற்பதில்லை' என்கிறார். “பணம் கிடைக்கலாம். ஆனால் தரம் குறையும் வாய்ப்பு இருக்கிறதல் லவா?” என்கிறார். தினசரி தயாரிப்பும் விற்பனையும், தினசரி கடை யின் முன் குவியும் கூட்டமும் இவர்களது தரத்தைச் சொல்லுபவை.
கடையில் மற்ற ஸ்வீட்களும் இருக்கின்றன. ஆனால், எல்லோரும் முதலில் ஆர்டர் செய்வது மைசூர்ப்பாகுதான். அங்கேயே வாங்கிச் சாப்பிடுபவர்களுக்கு இலையில் கொடுக்கிறார்கள். கையில் ஒட்டிக் கொள்ளும் நெய்யைத் துடைக்க டிஷ்யூ கேட்டால், “அதெல்லாம் இல்லை ” என்கிறார்கள்.
கடை ஆரம்பித்த புதிதில் மைசூர்ப்பாகு இப்போது இருப்பது போல் இல்லாமல் செங்கல் சைஸில் கால் கிலோ அளவில் ஒரே கட்டி யாகத்தான் விற்றிருக்கிறார்கள். அப்போது கிலோ மூன்று ரூபாய். அந்த விலையில் எல்லோராலும் வாங்க முடியாததால் சிறுதுண்டுகளாக விற்கும் வழக்கம் தொடங்கியிருக்கிறது என்பதும் இன்னும் சில கர்நாடகக் கிராமங்களில் செங்கல் சைஸ் மைசூர்ப்பாகு விற்பனை தொடர்கிறது என்பதும் இந்தக் கடையினரிடமிருந்து அறிந்துகொண்ட செய்தி. - “இன்று மைசூர் பா என்ற பெயரில் முற்றிலும் வெவ்வேறு வகைகளில் நாடு முழுவதும் மைசூர் பா தயாரித்து விற்கப்படுகிறது. ஆனால் நல்ல நெய் மணத்தோடு கலவையில் கொதிக்கும்போது உண்டான குமிழ்களின் சிறு சிறு துவாரங்கள் அழியாமல் ஒருவிதமான மொறு மொறுப்போடு வாயில் போட்டவுடன் கரைவதை உணர்ந்தால்தான் அது ஒரிஜினல் மைசூர் பாகு. மற்றதெல்லாம் மைசூர் பா என்ற பெயரில் ஒரு ஸ்வீட் அவ்வளவுதான்” என்கிறார் நட்ராஜ்.
இதைத் தவிர்க்க, மைசூர்ப்பாகு என்பது மைசூர் நகருக்குச் சொந்த மான தயாரிப்பு என்பதை நிறுவி மைசூர்பாகின் புவிசார் குறியீட்டிற்கு உரிமை கோரி, காக்கசுரா மடப்பாவிற்கு மன்னர் கொடுத்த சர்டிஃபி கேட், அரண்மனை தசரா விழாவில் அளிக்கப்பட்ட கௌரவம் போன்ற ஆவணங்களைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்க இருப்பதாகச் சொல்லுகிறார், குரு ஸ்வீட்ஸ் உரிமையாளர்.
கருத்துகள்