மத்திய அமைச்சரவை வீட்டு உபயோக சமையல் எரிவாயு விநியோகத்தால் ஏற்படும் இழப்புகளுக்காக பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு ரூ.22,000 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
3 பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு ரூ.22,000 கோடி மானியம் வழங்குவது என்ற பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் யோசனைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய எண்ணெய்க் கழகம் (ஐஓசிஎல்), பாரத பெட்ரோலியக் கழகம் (பிபிசிஎல்), இந்துஸ்தான் பெட்ரோலியக் கழகம் (ஹெச்பிசிஎல்) ஆகியவற்றுக்கு இந்த மானியம் வழங்கப்படும்.
வீட்டு உபயோக சமையல் எரிவாயு விநியோகம் தடைபடாமல் நடப்பதை உறுதி செய்து, இந்தியாவில் உற்பத்திச் செய்யப்படும் பொருட்களின் கொள்முதலுக்கு ஆதரவு தந்து தற்சார்பு இந்தியா திட்டத்திற்கான உறுதிப்பாட்டை தொடர இந்த ஒப்புதல் பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு உதவும்.
ஐஓசிஎல், பிபிசிஎல், ஹெச்பிசிஎல் ஆகிய பொதுத்துறை எண்ணெய் விநியோக நிறுவனங்கள் மூலம் முறைப்படுத்தப்பட்ட நிலையில் வாடிக்கையாளர்களுக்கு வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன.
2020 ஜுன் மாதத்திலிருந்து, 2022 ஜூன் மாதம் வரையிலான காலத்தில் சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை சுமார் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், சமையல் எரிவாயு விலை வாடிக்கையாளர்களுக்கு அந்த அளவுக்கு உயர்த்தப்படவில்லை. மாறாக இந்த காலத்தில் 72 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டின் அத்தியாவசியமான சமையல் எரிவாயு விநியோகத்தை 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன.
கருத்துகள்