கோயமுத்தூர் கார்வெடிப்பு உபா சட்டத்தில் ஐவர் கைது.
காரில் வெடித்து உயிரிழந்த கோயமுத்தூர் உக்கடம் பகுதி ஜமேசா முபீனிடம் ஏற்கனவே தேசியப் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் விசாரணை செய்ததுள்ள நிலையில், அவரது வீட்டைக் காவல்துறையினர் சோதனையிட்டதில் சில இரசாயன வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சார்கோல், சல்பர் போன்ற நாட்டு வெடிகுண்டு தயார் செய்யக்கூடிய சில பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவ தினமான அக்டோபர் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்கு முன்தினம் சனிக்கிழமை அக்டோபர் 22 ஆம் தேதி நள்ளிரவில் ஜமேசா முபீன் தன் வீட்டிலிருந்து ஒரு மர்மப் பொருளை ஐந்து பேருடன் அவர் எடுத்துச் சென்றது அவர் வீட்டுப் பகுதியில் அமைந்துள்ள சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகிய நிலையில் அந்த சி.சி.டி.வியில் பதிவான காட்சிகளின் படி காவல்துறையினர் ஜமேசா முபீனுடனிருந்த ஐந்து நபர்களைக் கைது செய்து விசாரணை செய்ததன் அடிப்படையில் உபா சட்டத்தில் ஐவரும் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து கோயம்புத்தூர் மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசியவர், "வெடித்த மாருதி 800 கார் இதுவரை 10 கைகள் மாறியிருக்கிறது. அவர்கள் அனைவரையும் அன்றைய தினம் மாலைக்குள் பிடித்து விசாரித்தோம் இந்த வழக்கில் ஐந்து பேரைக் கைது செய்து புலன் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையின் அடிப்படையில், வழக்கின் பிரிவுகளை மாற்றியிருக்கிறோம். அதன்படி கைதானவர்கள் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தில் (UAPA) வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. 20 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.
காவல் அதிகாரிகள் அருகிலேயே ரோந்துப் பணியில் இருந்தனர். அதன் காரணமாகத்தான் வாகனம் மேற்கொண்டு செல்லாமல் அங்கேயே வெடித்ததாகத் தகவலுள்ளது. உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டிலிருந்து பொட்டாசியம் நைட்ரேட், சார்கோல்,அலுமினியம் பவுடர், சல்பர் என 75 கிலோ வெடி மருந்துக்கான வேதிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது, அவர்களின் பின்னணி என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. யூகங்கள் அடிப்படையில் நிறைய தகவல்கள் வெளியாகி வருகின்றன. சம்பவம் நடப்பதற்கு முன்பு இரண்டு சிலிண்டர், மூன்று டிரம்களை தூக்கிச் சென்ற சி.சி.டி.வி தான் வெளியானது. தடயவியல் அறிக்கை கிடைத்தால் தான் உறுதியாகச் சொல்ல முடியும். இப்போது கைதுசெய்யப்பட்டவர்களை, 2019 ஆம் ஆண்டு என்.ஐ.ஏ விசாரித்திருக்கிறது. அது குறித்தும் விசாரிக்கிறோம். ரியாஸ், நவாஸ், பெரோஸ் ஆகிய மூன்று பேர் உண்மையைத் தெரிந்து கொண்டுதான் முபினுக்கு உதவி செய்திருக்கின்றனர்” எனத் தெரிவித்தார். கோயமுத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பு ஜமேஷா முபின் உயிரிழந்த விவகாரத்தில் அடுக்கடுக்கான அதிர்ச்சித் தகவல்களை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், "ஜமேஷா முபினின் உயிரிழப்பு தீவிரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பு என உளவுத்துறை கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனால் மாநில அரசு அனைத்தையும் மறைக்கிறது, உண்மையை வெளிப்படுத்த வேண்டிய கடமை பாஜகவுக்கு உண்டு என குறிப்பிட்டார். மேலும்
உயிரிழந்த ஜமேஷா முபின், கடந்த 21ஆம் தேதி அவருடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டசில்,
என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரிய வந்தால், நான் செய்த தவறை மன்னித்து விடுங்கள், எனது குற்றங்களை மறந்துவிடுங்கள், என்னுடைய இறுதி சடங்கில் பங்கேறுங்க, எனக்காக பிரார்த்தனை பண்ணுங்க என குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார் மேலும், ஜமேஷா முபீனின் வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் தகவல் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்-ஐ வைத்துப் பார்க்கும் போது, இது தற்கொலைப் படை தாக்குதலாக இருக்கும் என தெரிவித்தவர், இது உண்மை என்றால் கோவை மக்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். தமிழக அரசு நிறைய விஷயங்களை மறைப்பதாக தெரிவித்தவர் 8 பேரை சட்டத்துக்கு புறம்பான கஸ்டடியில் காவல்துறை வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். இத குறித்து டிஜிபி சைலேந்திர பாபு கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும் என கூறியவர், 5 பேரை எந்த பிரிவுகளில் கைது செய்தார்கள் என்ற தகவலை வெளியிடாதது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் தான் கோயமுத்தூர் மாநகரக் காவல்துறை ஆணையர் செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்ட தகவல் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்