தமிழ்நாட்டில் ஒரு முறைப் பயன்படுத்தும் 8 லட்சம் கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியில் மாணவர்கள்; அக்டோபர் 27,29,31 தேதிகளில் விழிப்புணர்வு இயக்கம்
2022 அக்டோபர் 1 முதல் 31 வரை நாடு முழுவதும் ஒரு முறைப் பயன்படுத்தும் ஒரு கோடி கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுவதற்கான இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் ஒரு முறைப் பயன்படுத்தும் 8 லட்சம் கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களும் நேரு யுவகேந்திரா சங்கதன் உறுப்பினர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தூய்மை இயக்கத்தின் 2.0 பற்றி சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாட்டு நலப்பணித்திட்ட தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சாமுவேல் செல்லையா, நேரு யுவகேந்திரா சங்கதனின் தமிழ்நாடு - புதுச்சேரி இயக்குநர் திரு என் எஸ் மனோரஞ்சன், சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் திரு எம் அண்ணாதுரை ஆகியோர் விவரித்தனர்.
இந்தியாவில் ஆண்டுக்கு 35 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகுகின்றன. இவற்றில், 65 சதவீதம் மட்டுமே அகற்றப்படுகின்றன. எஞ்சிய கழிவுகளால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது. இதனைத் தடுக்க அக்டோபர் 1 முதல், 31 வரை தூய்மை இயக்கம் 2.0 நடத்தப்பட்டு வருகிறது என்று சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் திரு எம் அண்ணாதுரை தெரிவித்தார்.
சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைப் பகுதிகள் போன்றவற்றில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியை மேற்கொள்வதோடு மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அக்டோபர் 27 அன்று திருநெல்வேலியிலும், அக்டோபர் 29 அன்று கோயம்புத்தூரிலும், அக்டோபர் 31 அன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படுவதோடு விழிப்புணர்வு பிரச்சாரமும் நடத்தப்படும் என்று அவர் கூறினார். மேலும், அக்டோபர் 31 அன்று ஒற்றுமை தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெறும் என்று திரு அண்ணாதுரை தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் நாட்டு நலப்பணித்திட்டத்தில் 4 லட்சம் மாணவர்கள் உள்ளனர் என்றும் இவர்கள் மூலம் அக்டோபர் மாதத்தில் எட்டு லட்சம் கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று இத்திட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் திரு சாமுவேல் செல்லையா, கூறினார். இம்மாதம் 21ம் தேதி வரை இந்த மாணவர்களைக் கொண்டு 7,50,000 கிலோவுக்கும் கூடுதலான பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
பொதுமக்களின் பழக்க வழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே பிளாஸ்டிக் கழிவுகளை முழுமையாக ஒழிக்க முடியும் எனற அடிப்படையில் வீதி நாடகம், நடனம், பலகுரல் நிகழ்ச்சி, போன்றவற்றின் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் அமைச்சர்களும், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மற்றவர்களுடன் இணைந்து ஒத்துழைப்பது ஊக்கத்தை அளிக்கிறது என்று நேரு யுவகேந்திரா சங்கதனின் மாநில இயக்குநர் திரு என் எஸ் மனோரஞ்சன் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இணை இயக்குநர் திரு நதீம் துஃபைல் உடனிருந்தார்.
கருத்துகள்